வெளிநாட்டுத் தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம், சட்டவிரோத குடியேறிகளை முறையான தொழிலாளர்களாக மறுசீரமைக்கும் திட்டத்தை நீட்டித்தல் எனும் கொள்கை மாற்றங்களை மலேசிய அரசு கொண்டு வந்திருக்கிறது.
மலேசியாவின் முக்கியமான துறைகளில் ஏற்பட்டுள்ள மனிதவளத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலேசியாவுக்கான தொழிலாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்வதில் முதன்மையான நாடாக உள்ள இந்தோனேசியா இம்மாற்றங்களை வரவேற்றுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.
இந்தோனேசிய மனிதவளத்துறை அமைச்சர் இட பெள்சியா, சட்டத்துறை அமைச்சர் யாசொன்னா லோலே ஆகியோருடனான சந்திப்பை தொடர்ந்து இக்கருத்தை மலேசிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சட்டரீதியாக, சட்டவிரோதமாக என மலேசியாவுக்கு புலம்பெயர்வதில் முதன்மையான இடத்தில் உள்ள இந்தோனேசிய தொழிலாளர்கள் மலேசியாவின் கட்டுமானத்துறை, தோட்டத்தொழில் என பல்வேறு துறைகளின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தின் நிலாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிவரவுத்துறை தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகளாக கண்டறிப்பட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குடியேறிகள் அனைவரும் இந்தோனேசிய நாட்டவர்கள் என அம்மாநில குடிவரவுத்துறை இயக்குநர் கென்னித் தன் அய் கியாங் தெரிவித்திருக்கிறார்.
காட்டுப்பகுதிக்குள் இருந்த சட்டவிரோத கட்டிடத்திலிருந்து இக்குடியேறிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டிடம் கட்டுப்பட்டு குடியேறிகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக கண்டறிப்பட்டிருக்கிறது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக Lenggeng குடிவரவுத் தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.