இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் பிரதமர் மகிந்த

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை பிரதமர் ஊடக செயலாளர்  உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடிக்கு  ஆளும் அரசு தீர்வு வழங்கத் தவறியதாக குற்றம்சுமத்தி, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் பதவி விலக வேண்டும்என வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 9ம் திகதி முதல் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், கோட்டாபயவும் மஹிந்தவும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று  அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் நடந்த மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்த வேளையில், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது.

d3346feb e3b2 458d aa81 6c3ef74026e3 இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் பிரதமர் மகிந்த

பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி மேற்கொள்ளப்படும் ஏற்பாடுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக மஹிந்த கூறியுள்ளார்.

இந்த ராஜிநாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது பதவி விலகல் அதிகாரபூர்வமானதாக கருதப்படும்.

Tamil News