மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிசிஏ தகவலின்படி, அந்த சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரது தனி உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.
மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று, பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



