பொய்சொல்வது வாக்குறுதிகளை அளிப்பது இலங்கை மக்களிற்கு சாதாரண விடயமாகிவிட்டது – இராஜாங்க அமைச்சர் முன்னிலையில் தென்கொரிய அதிகாரி

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தென்கொரிய நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கொழும்பில் இன்று ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றிற்கு 30 நிமிடம் தாமதமாக வந்த இராஜாங்க அமைச்சரை தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின்South Korea Disaster Relief Foundation தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.

தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின் தலைவரை  இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் இன்று சந்திக்க ஏற்பாடாகியிருந்தது எனினும் இராஜாங்க அமைச்சரும் அவரது குழுவினரும் குறிப்பிட்ட சந்திப்பிற்கு அரைமணிநேரம் தாமதமாக சென்றுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு தென்கொரியா எவ்வாறு உதவலாம் என ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கே  இலங்கை அதிகாரிகள் தாமதமாக சென்றுள்ளனர். இதன் காரணமாக சீற்றமடைந்த தென்கொரிய அமைப்பின் தலைவர் சோ சங் லீ இலங்கை குழுவினரை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமொன்றிற்கு அரை மணித்தியாலம் தாமதமாக செல்வது நல்ல அறிகுறியில்லை அமைச்சர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் நிகழ்வுகளிற்கு உரிய நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் இது இடம்பெற்றிருந்தால் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான  அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அந்த சந்திப்பு உரிய நேரத்தில் ஆரம்பமாகவேண்டும்,அமைச்சர்களால் அதனை செய்ய முடியாவிட்டால் அவர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும அவர் தெரிவித்துள்ளார்.

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தெரிவித்துள்ள தென்கொரிய அமைப்பின் தலைவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இதனை தெரிவிப்பதை கேள்விப்பட்டு இலங்கை மக்கள் வெட்கப்படவேண்டும், இலங்கை மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களால் வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,அவற்றை நிறைவேற்றுவதை ஒருபோதும் மறக்க கூடாது அமைச்சர்களும் அவ்வாறே செயற்படவேண்டும்,அவ்வாறு செயற்படாத அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை,மக்கள் பொய்சொல்லக்கூடாது,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி