அவுஸ்திரேலியா: அகதிகள் கால அளவின்றி சிறை வைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ஐ.நா

மனிதத்தன்மையற்ற வகையில் கால அளவின்றி அகதிகள், குடியேறிகள் சிறைவைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அவுஸ்திரேலிய அரசை ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் குடிவரவுத் தடுப்பில் வைத்திருப்பதற்கான கால எல்லையை நிர்ணயிக்காமல் உள்ளதாக சித்திரவதை கண்காணிப்புக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் எட்வேர்ட்ஸ் கூறியிருக்கிறார்.

கடந்த மார்ச் மாத கணக்குபடி, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதி/குடியேறியின் சராசரி தடுப்புக் காலம் 780 நாட்களாக (சுமார் இரண்டு ஆண்டுகள்) உள்ளது.

இந்த நிலையில், சித்திரவதை கண்காணிப்புக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்ணும் முதல் அவுஸ்திரேலியருமான அலையஸ் எட்வேர்ட்ஸ், அவுஸ்திரேலியாவின் இத்தடுப்பு முறை தொடர்பான அவசர நடவடிக்கை தேவை என வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன் இந்த நீண்டகால கொள்கைக்கு தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சியும் பொறுப்பு எனக் கூறியிருக்கிறார்.

“அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை காலவரையின்றி சிறைவைப்பதை கடந்த 1992ம் ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. பின்னர் ஆட்சிக்கு வந்த தாராளவாத கட்சியும் அதை நீட்டித்தது. இது தொடர்பாக சீர்திருத்தம் தேவை என தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கத்திடம் நான் முறையிடுகிறேன்,” என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு மேல் தனிநபர்கள் எவ்வித முடிவுமின்றி, சட்டரீதியாக நிச்சயத்தன்மையற்ற நிலையில் வைக்கப்பட்டிருப்பது மனிதத்தன்மையற்ற அல்லது உளவியல் ரீதியிலான சித்திரவதை என வகைப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

“அவுஸ்திரேலியா போன்ற சட்ட, சமூக பொருளாதார அமைப்பை கொண்டுள்ள பெரும்பாலான நாடுகளில் 6 மாதங்கள் அனுமதிக்கப்பட்ட தடுப்புக்காவல் என்பதே தடுப்பிற்கான கால எல்லையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதை அவுஸ்திரேலியா செய்வது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்,” என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தாண்டு தடுப்பு முகாம்களை ஆய்வு செய்வதற்காக அவுஸ்திரேலியாவை பார்வையிட்ட ஐ.நா.குழுவினரை மனநல மையங்களையும் நியூ சவுத் வேஸ், குவின்ஸ்லாந்து சிறைகளையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐ.நா.குழுவின் பயணம் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.