இலங்கை : “உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு” – சம்பிக்க ரணவக்க

139 Views

இலங்கையில் “எரிபொருள், எரிவாயு மற்றும் உணவு, மருந்துப் பொருட்களை பெறுவதற்கு மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.

இதனால் கடந்த 9 ம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

Tamil News

Leave a Reply