“ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம்“-வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை

“ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்” என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் இராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.

உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, இராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் வாக்னர் ஆயுதக் குழு ஓர் எச்சரிக்கை விடுக்க புதினால் வளர்க்கப்பட்ட குழுவால் தற்போது அவருக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் சனிக்கிழமை வெளியிட்ட கருத்தில், ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாட்டின் இராணுவத் தலைமையை வீழ்த்துவோம். நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து,ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாஸ்கோ மேயர் செர்கெய் ஸோபியானின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வாக்னர் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஸ்டோவ் மற்றும் லிபெட்ஸ்க் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.