இந்தியாவின் உணர்வுகளை மனதில் வைத்து செயற்படுவோம் – அலி சப்ரி

இந்தியாவின் உணர்வுகளை மனதில் வைத்து இலங்கை செயற்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் wion  இன் இராஜதந்திர செய்தியாளர் சிடன் சிபலிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவின் வேவு கப்பலின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளிற்கும் இடையில் கசப்புணர்வு எதுவும் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்தியாவின் உணர்வுகள் மனதில் வைக்கப்படும் என  குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி- இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வாறானதாக காணப்படுகின்றது ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில்- இலங்கை கடந்த ஒருவருடத்தில் மிகப்பெரிய சிரமங்களை நெருக்கடிகளை சந்தித்துள்ளது.ஆனால் மார்ச் மே ஜூலை மாதங்களில் நீங்கள் பார்த்த விடயங்களுடன் ஒப்பிட்டால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சுறறுலாத்துறை மீண்டும் உயிர்பெறத்தொடங்கியுள்ளது.அந்நிய செலாவணியில் சிறிதளவு ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக எங்களால் எரிபொருள் சமையல் எரிவாயு ஏனைய விநியோகங்களை ஒரளவு சாதாரணமாக பெறமுடிகின்றது.

ஆனால் நாங்கள் இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை.நன்மையான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கேள்வி – ஆர்ப்பாட்டங்களின் பின்னால் சில தீவிரவாத சக்திகள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆதரவை பெறுகின்றனரா என்பதையும் கண்டறிந்துள்ளீர்களா?

பதில்-உண்மையில் நீங்கள் மார்ச் மே ஆர்ப்பாட்டங்களை பார்த்தீர்கள் என்றால் எங்களிற்கு பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது.

நான்கைந்து நாட்களிற்கு நீண்ட வரிசைகள் காணப்படும் என்றால் சமையல் எரிவாயு இல்லாவிட்டால் விலைகள் அதிகரித்துக்கொண்டே சென்றால் உணவு உரம் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவினால் பொதுமக்கள் வீதிக்கு வருவதற்கான காரணங்கள் உள்ளன நாங்கள் இது குறித்து மன்னிப்பு கோருபவர்களாக காணப்பட்டோம்.நாங்கள் பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியுள்ளோம்.

அதன் பின்னர் அரசமைப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார்,தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகிவிட்டார்,புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது ஆனாலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.இவை மக்கள் ஆதரவுள்ள மக்களின் உணர்வுடன் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் இல்லை.

நான் தீவிரவாதிகள் என தெரிவிக்க மாட்டேன் ஆனால் பல்வேறு நோக்கங்களிற்காக நாட்டை ஸ்திரதன்மை இழக்கச்செய்யும் உள்நோக்கம் கொண்ட நபர்கள்.

நாங்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளோம்,எங்கள் அனைவருக்கும் அது தெரியும்,இதில் புதிய விடயம் எதுவுமில்லை ,எதிர்கட்சிகள் முன்னேற்றத்தை தடுக்க முயல்கின்றன நாடு முன்னேற்றப்பாதையில் சென்றால் தேர்தலிற்காக நீண்ட காலம் காத்திருக்கவேண்டும் என்பது அவர்களிற்குதெரியும்.

அவர்கள் ஸ்திரமின்மை ஏற்படவேண்டும் என கருதுகின்றனர் சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பிக்கின்ற ஒவ்வொரு தடவையும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன, இந்த ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றை  ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற சில சக்திகள் முன்னெடுக்கின்றன.

இந்த தடவை தங்கள் நோக்கங்கi நிறைவேற்ற பொதுமக்களின் சீற்றத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கேள்வி – சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு காணப்படுகின்றன  இந்த பேச்சுவார்த்தைகளிற்கு உதவும் விடயத்தில் இந்தியா பங்களிப்பு செய்துள்ளதா?

பதில் – நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன் அவர்கள் ஆராய்ந்துள்ளனர் பணியாளர் மட்ட இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈஎவ்எவ்விற்கு முந்தைய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் இணங்கியுள்ளோம்.நாங்கள் இவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஈஎவ்எவ் என்பது 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவி .

சர்வதேச நாணயநிதியம் இதில் ஈடுபாட்டதும் அமைப்பு முறை மீது நம்பிக்கை ஏற்படும்.ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி ஆகியன பேச்சுவார்த்தைகளிற்கு வரும் உதவமுன்வரும் நாங்கள் மீண்டும் நிதிசந்தையை நோக்கி செல்ல முடியும். இதன் காரணமாகவே இது முக்கியமானது.

எங்கள் வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியா உண்மையில் எங்களிற்கு உயிர்நாடியை வழங்கியுள்ளது.பொருளாதாரத்தை பொறுத்தவரை அந்த கடனுதவிகள் நாங்கள் தொடர்ந்தும் நீண்டகாலத்திற்கு இயங்ககூடிய நிலையை உறுதி செய்தன.

நான் வோசிங்டனில் இருந்தவேளை உங்களின் நிதியமைச்சர் சீத்தாராமன் உங்களின் குழுவிற்கு தலைமை தாங்கி சர்வதேச நாணயநிதியத்துடான பேச்சுவார்த்தைகளில் எங்களிற்கு ஆதரவளித்தது எனக்கு நினைவில் உள்ளது.அவர்கள் அதனை தொடர்ந்தும் செய்து வந்துள்ளனர்.

ஆகவே இதுமுக்கியமானது இந்தியாவின் ஆதரவு எங்களிற்கு மிகவும் அவசியமானது. தனது அயல்நாட்டின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான தருணங்களி;ல் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

கேள்வி – சமீபத்தைய நெருக்கடிகளின் போது இந்தியா போல ஏன் சீனா நிதி உதவி வழங்கவில்லை?

பதில்- குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக சீனாவும் எங்களிற்கு ஆதரவளித்தது.அவர்களும் எங்களிற்கு கடனுதவியையும் நிதி உதவியையும் வழங்கினார்கள்.

மனிதாபிமான உதவிக்கு அப்பால் மத்திய வங்கியில் எங்கள் கையிருப்புகளை பேணுவதற்காக சில உதவிகளை வழங்கினார்கள்.

இந்தியா போன்று சீனாவும் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களைவழங்கும் என எதிர்பார்க்கின்றோம் இதன் காரணமாக எங்களால் சர்வதேச நாணய நிதியத்தினை நாட முடியும் விடயங்களிற்கு தீர்வை கண்டு மீட்சி பாதையை நோக்கி செல்ல முடியும்.

இலங்கை மீட்சிப்பாதைக்கு பாதைக்கு திரும்புவதும் வேகமாக திரும்புவதும் கடன் வழங்கிய அனைத்து  தரப்பினருக்கும் மிக முக்கியமான விடயம்.

எவ்வளவு நீண்ட காலத்திற்கு கடன் இடைநிறுத்திவைக்கப்படுகின்றதோ அவ்வளவு காலத்திற்கு மீட்சி தாமதமாகும்.இது கடன் வழங்கியவர்களிற்கும்  முதலீட்டாளர்களிற்கும் மோசமான விடயம். சீனா உட்பட அனைவரும் இதனை புரிந்துகொண்டுள்ளனர்.

நன்றி-வீரகேசரி