ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்; பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிமுயற்சியை முறியடிக்க இன்று இடம்பெறும் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டுவருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய 1948 தொடக்கம் இன்று வரை நடைமுறையில் இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட ஒன்றையாட்சி அரசியல் யாப்புக்களானவை தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் நிலப்பறிப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பௌத்த மயமாக்கல்கள் உள்ளிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் காரணமாக அமைந்துவந்தன. அதன் காரணமாகவே தமிழர்கள் நாம் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி ஆட்சியை கோரி போராடி வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இப் போராட்டப் பயணத்தின் இடையில் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி 1987ஆம் ஆண்டு ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் கடந்தும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டு 44 வருடங்களின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி இலங்கைக்கான 4வது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில் கடந்த 34வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகளால் கோரப்பட்டுள்ளது.

இச் செயற்பாடு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிமுயற்சியாகும். இச் சதிமுயற்சியை முறியடிக்கவும் தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணயமுள்ள சமஸ்டித்தீவை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி இடம்பெறுகின்றது. இப் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து இன்றைய பேரணி காலை 10.00 மணிக்க யாழ். நல்லூர் கந்தன் வீதியில் ஆரம்பமாகி பொதுக் கூட்டம் முத்திரைச்சந்தி கிட்டு பூங்காவில் நடைபெறம் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

Tamil News