4 விடயங்களில் ஒருமித்துச் செயலாற்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முடிவு

465 Views

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நான்கு விடயங்களில் ஒருமித்துச் செயலாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., ரெலொவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., அக்கட்சியின் உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் எம்.பி., குருசுவாமி சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் இதில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது. எனினும், மெய்நிகர் உரையாடல் இணைப்பு ஏற்பாடு சீரமைக்கப்படுவதில் சிக்கல் நேர்ந்தமையால் அவர் பங்குபற்ற முடியாமல் போனது.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் மற்றும் தமிழ்த் தரப்பினரோடு அரசு முயற்சிக்கும் பேச்சு ஆகியவை முக்கிய விடயங்களாக இதன்போது பேசப்பட்டன.

ஏற்கனவே தமிழ்க் கட்சிகள் சந்தித்த கூட்டங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்களை அடையாளப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பட்டியலிடப்பட்ட விடயங்களில் மிக முக்கியமாக, முதல் கட்டமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காணப்படுவதற்கு நான்கு விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் என்பவையாகும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை எம்முடைய தீர்வாக ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பது அனைவருடைய நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் அரசமைப்பில் இருக்கக்கூடிய 13ஐ நிறைவேற்ற அரசு முன்வருவது நல்லிணக்க நடவடிக்கையாகக் கருத முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயங்களில் காத்திரமாக ஒருமித்துச் செயலாற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டது. அதேவேளை, மற்ற விடயங்களையும் கட்டம் கட்டமாக ஒருமித்து எதிர் காலத்தில் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அரசுடன் பேச்சு நடத்துவது அவசியம். ஆயினும், அது தமிழ் மக்களின் நலன்களுக்காக அமைய வேண்டும் என்பதிலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசு தப்பிக்க இடமளிக்க கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என முடிவு எட்டப்பட்டது.

போருக்கு முன்னும் பின்னும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பல பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமாகும். இது பேச்சுக்கான ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக அமைவதோடு சாதகமான சூழலையும் ஏற்படுத்தும். ஆகவே, சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில், மேல் குறிப்பிட்ட இணக்கம் காணப்பட்ட விடயங்கள் உட்பட மற்றும் பல விடயங்களையும் உள்ளடக்கிய கோரிக்கையை முன்வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரவிருக்கும் ஐ.நா. கூட்டத் தொடரில் 46/1 தீர்மானம் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதன் பொருட்டு தமிழ்த் தரப்பினால் ஒருமித்து அறிக்கை ஒன்று தயாரித்து சமர்ப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதில், 46/1 தீர்மானத்தில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதேவேளை அவருக்கு எதிராகவும் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியும் குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் விபரங்களையும் உள்ளடக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது.

முற்பகல் 11 மணி தொடக்கம் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்றது எனவும், மீண்டும் விரைந்து சந்திப்பதற்கான ஒத்திசைவுடன் கலந்துரையாடல் நிறைவுபெற்றது எனவும் இதில் கலந்து கொண்டவர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply