மீள்குடியேற்றத்துக்கும் காணிகள் விடுவிக்கப்படுவதில்லை :பாராளுமன்றில் கருத்து

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணி விடுவிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி பிரச்சினை மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ள பின்னணியிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வனவளத்துறை திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தால் பொதுமக்களின் காணிகள் சுற்றறிக்கைகள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மக்களின் விவசாய காணிகளும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் விடுவிக்காமல் இருப்பது தொடர்ந்து நிலையான குடியமர்த்தலுக்கு தடையாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் வெளிப்படுத்தினார்.

காணி அபிவிருத்திச் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட காணிகள் கூட மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் வசமுள்ள தனியார் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அக்காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என்றும் சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை வசமுள்ள அரச காணிகள் தொடர்பில் ஆராய சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஒருசில மாவட்டங்களில் கிராம சேவகர் மட்டத்தில் தகவல் பெற்றுக் கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அவ்வாறான தன்மை காணப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட கூடிய தனியார் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் குறித்து கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.