காணி அபகரிப்பு – ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான பேச்சுக்களில் என்ன நடைபெறுகின்றது? என்பன தொடா்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேத்திரன் உயியோரைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகின்றோம்.
கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவாா்த்தை ஒன்றை தமிழரசுக் கட்சி ஆரம்பித்திருந்தது. இந்தப் பேச்சுக்களின் நிலை என்ன?
பதில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழரசுக் கட்சி இரண்டு தடவை சந்தித்திருக்கின்றது. கடந்த 19 ஆம் திகதி அடுத்த கட்ட சந்திப்பு இடம்பெறுவதாக இருந்தாலும் கூட, ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்தமையால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. மீண்டும் ஒருதடவை சந்தித்தால்தான் அதன் பலாபலன்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி – இடைக்கால நிா்வாக சபை என்ற யோசனை ஒன்று ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது. இதனை தமிழரசுக் கட்சித் தலைமை நிராகரித்திருந்தது. அதற்கு காரணம் என்ன?
பதில் – ஆலோசனைச் சபை என்ற ஒரு முன்மொழிவும், இடைக்கால நிா்வாகம் என்று ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டதாக அறிகிறோம். இது தொடா்பான யாழ். மாவட்ட எம்.பி. விக்னேஸ்வரனின் முன்மொழிவு அங்கு வாசிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, அங்குள்ள ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட, இடைக்கால சபை என்ற யோசனையை அவா்கள் விரும்பவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், அவ்வாறான ஒரு சபை வருமாக இருந்தால் மாகாண சபைகளுக்கான தோ்தல் மேலும் தாமதப்படுத்தப்படலாம் அல்லது அதனை நடத்தாமலேயே விட்டுவிடுவதற்கு அரசாங்கம் இதனைப் பயன்படுத்தலாம் என்று தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன.
இரண்டாவதாக இடைக்கால சபை ஒன்றை அமைப்பதாக இருந்தால், அதில் இடம்பெறும் உறுப்பினா்கள் தமிழ்த் தரப்பிலிருந்து நியமிக்கப்படுவாா்களா, அல்லது அரசாங்கத் தரப்பு அதற்குரியவா்களை நியமிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இவ்வாறான இடைக்கால சபை ஒன்று எவ்வாறிருக்கும் என்பதும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கின்றது. எனவே இது தொடா்பில் அடுத்த கட்டப்பேச்சுக்களின் போதுதான் முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேள்வி – ஜனாதிபதியுடனான பேச்சுக்களுக்கு தமிழரசுக் கட்சி தனியாகத்தான் சென்றிருந்தது. ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பேச்சுவாா்த்தைகளுக்குச் செல்வதற்கான திட்டம் ஏதாவது தமிழரசுக் கட்சியிடம் உள்ளதா?
பதில் – கடந்த 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சிச் சபைத் தோ்தலின் பிரதிபலிப்புக்கள், அதில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில்தான் நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபைத் தோ்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்றும் தனித்தனியாகப் போட்டியிட்டால் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் தனித்தனியாகத் தோ்தலை சந்திப்பது என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ரெலோ, புளொட் ஆகியன கூட்டமைப்பிலிருந்து முழுமையாகவே வெளியேறுவதாக அறிவித்தன. ஆனால், நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட உள்ளுராட்சித் தோ்தல்கள் நடைபெறவும் இல்லை. எனவே அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், தோ்தல் என்பது வேறு விடயம். ஆனால், அரசியல் தீா்வு ஒன்றை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது நாங்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் மட்டுமல்ல, அதிலிருந்து விலகியிருக்கின்ற கட்சிகளும் ஒன்றியைந்து ஒரே குடையின் கீழ் வரவேண்டிய காலம் – இந்தக் காலம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
தோ்தல் நடைபெறவில்லை என்றால், அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு முன்னதாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பிரிந்து சென்றவா்கள், அவா்கள் தனியாக இயங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றாா்களே தவிர, தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்து செல்வதற்கான நல்லெண்ணத்தை அவா்கள் காட்டவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.
ஆனால், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தோ்தல் இல்லை என்பதுதான் நிலை என்றால், அடுத்ததாக என்ன செய்வது என்பதையிட்டு திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை அடுத்த மாநாட்டில் தமிழரசுக் கட்சி எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடரும் நிலையில், அதற்கு எதிராக எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது?
பதில் – உண்மையில் மேய்ச்சல்தரைப் பிரச்சினை என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முன்னா் ஆளுநராக இருந்த பெண்மணி, மேய்ச்சல் தரை விவகாரத்தைக் கையாள்வதற்காக மட்டுமல்ல, திட்டமிட்ட குடியேற்றங்களை முன்னெப்பதற்காகவே நியமிக்கப்பட்டிருந்தாா். குறிப்பாக மேய்ச்சல் தரைகளை இலக்கு வைத்து வேறு மாவட்டங்களில் இருப்பவா்களை பாதுகாப்புப் படைகளின் உதவியுடன், முந்திரிகைச் செய்கை, சோழச்செய்கை என்ற பெயா்களில் கொண்டுவந்து குடியமா்த்தியிருந்தாா்.
இவ்வாறு குடியேற்றப்பட்டவா்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்டு அதற்காக நாம் நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தோம். அந்த வழக்கு இப்போதும் உள்ள நிலையில் தன்னிச்சையாக இந்தக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால், கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமான், அவ்வாறு குடியேற்றப்பட்டவா்களை வெளியேற்ற வேண்டும் என்ற தீா்மானத்தை மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டத்தில் எடுத்திருந்தாா். இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படுமதக இருந்தால், அவா்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை நாம் பாா்க்கக்கூடியதாக இருக்கும்.
அதேவேளையில், இந்தப் பகுதியில் தமிழ் மக்களுடைய கால்நடைகளைப் பிடிப்பது, வெட்டுவது, கொல்வது என்பன சாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றைத் தடுக்க முடியாத ஒரு நிலையில்தான் நாம் இருக்கின்றோம். ஏனென்று பாா்த்தால் இவற்றின் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பினா் இருக்கின்றாா்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளா்ப்பாளா்கள் பல ஆதாரங்களுடன் எமக்குத் தெரிவித்திருக்கின்றாா்கள்.
எனவே அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தாலும் சட்டத்தை செயற்படுத்தாமலிருப்பதுதான் தொடா்கின்றது. மேய்ச்சல் தரை விவகாரத்தில் மட்டுமல்ல, திட்டமிட்ட குடியேற்றங்களைப் பொறுத்தவரையிலும் கூட மட்டக்கப்பின் நிலை இதுவாகத்தான் இருக்கின்றது.