முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி – சரணடைந்த விடுதலைப்புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி! இன்று முதல் அகழ்வுப் பணி | Kuruvi

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில், நீர் வழங்கலுக்கான குழாய்களை பொருத்துவதற்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, வெட்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அது குறித்து கொக்கிளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மட்டுமின்றி, ஆடைகள் சிலவற்றையும்  பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்நிலையில், இறுதி யுத்தத்தின் போது 2009ம் ஆண்டு காலப் பகுதியில் வட்டுவான் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. 84ம் ஆண்டிற்கு பிறகு கொக்கிளாய், கொக்குதொடுவாய் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்கள் 2012,13,14 ம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். 2009ம் ஆண்டு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் குழுவை ஏதாவது செய்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது என சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை  என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், மற்றும் காணாமல் போனவர்களுக்கான அமைப்பு, ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு  ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.