கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் அபகரிப்பு: இந்த ஆட்சியில் என்றேனும் தீர்வு கிடைக்குமா?

20251221 125124 கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் அபகரிப்பு: இந்த ஆட்சியில் என்றேனும் தீர்வு கிடைக்குமா?

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் டனுசன் தெரிவித்துள்ளார்.

“நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” என்ற தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சுயாதீன செயலணி  ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

திருகோணமலையில் ஒன்றுகூடிய  அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இணைந்து இச்செயலணியை உருவாக்கியுள்ளனர்.

அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூட்டு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செயலணியை அமைப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கியிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் நில அபகரிப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலணியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே குச்சவெளி பிரதேச சபை அங்கத்தவர் டனுசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் நில அபகரிப்பு, சிங்கள – பௌத்தமயமாக்கல் போன்ற பிரச்சினைகள் இன்னும் பேசுபொருளாகவே இருந்து வருகிறதே தவிர, இதுவரை நிரந்தரமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குள், தமிழ் பேசும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் பூர்விக நிலங்கள் பல்வேறு காரணங்களின் பெயரில் அபகரிக்கப்படுகின்றன.

இவற்றுக்கு உதாரணங்களாக தென்னமரவாடி தொல்லியல், புல்மோட்டை தொல்லியல் மற்றும் புனித பூஜா பூமி, திரியாய் தொல்லியல் மற்றும் பூஜா பூமி, வனவளத்துறை ஆகியவற்றின் பெயரால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை கூறலாம்.

ஈழப் போருக்குப் பின்னர் நாட்டில் ஐந்து ஜனாதிபதிகள் மாறியபோதும், தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆட்சிகள் மாறினாலும், சிறுபான்மை மக்களின் நிலை மாற்றமடையவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு, இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என்ற பெரும் நம்பிக்கையுடனேயே இன்றும் நாம் நில மீட்புக்காக ஒன்றிணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.