முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள ‘கம்பித்தறை’ என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் காணிகளுக்குரிய மக்களிடம் இது தொடர்பில் நேரில் சென்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு அபகரிக்கவுள்ள தமிழ் மக்களின் காணிகளுக்கு பதிலாக கருநாட்டுக்கேணி பகுதியில் காணி வழங்கப்படுமெனவும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் இத்தகைய நடவடிக்கையால் அதிருப்திக்குள்ளான மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் இதுதொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் மக்களின் அழைப்பினை ஏற்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நேற்று (06) கொக்கிளாய்ப் பகுதிக்கு நேரில் சென்று, காணிகளுக்குரிய தமிழ் மக்களுடன் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு, கம்பித்தறையில் 32 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 44 ஏக்கர் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகள் காணப்படுகின்றன.
குறித்த கம்பித்தறை மானாவாரி விவசாயக் காணியில், காணிகளுக்குரிய தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டு தமது பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்னர் முழுமையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் 16 தமிழ் மக்கள் அங்கு மானவாரி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
அப்போது குறித்த பகுதியில் கனியமணல் அகழ்விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என ஒரு பெயர்ப்பலகை இடப்பட்டதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு பெயர்ப்பலகை இடப்பட்டதற்கு கடந்த 2016 இல் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் சென்று தம்மால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பின்னர் 2020.08.14ஆம் திகதியன்றும் இந்த நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்டசெயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதன்பின்பு 2020ஆம் ஆண்டிற்கான பெரும்பொக விவசாய நடவடிக்கைமேற்கொள்வதற்கு தமிழ் மக்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக அப்பகுதியை கைத்தொழில் அமைச்சின் கீழான கனிபொருள் மணல் கூட்டுத்தாபனம் காணிகளுக்குரிய மக்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது, முட்கம்பிகளால் அடைத்து ஒரு அத்துமீறிய அபகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அந்தவகையில் 13.05.2021 இக்காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலருக்கு மீண்டு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதன்பின்னர் இக்காணி விடுவிப்பபை வலியுறுத்தி கடந்த 12.02.2022அன்று கொக்கிளாய் பாடசாலை வளாகத்திலிருந்து குறித்த காணிகள் உள்ள இடம்வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது காணி விடுவிப்பையே வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 02.12.2022 திகதியன்று கொக்கிளாய் கிழக்கு, கம்பித்தறைப் பகுதிக்கு நேரடியாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசசெயலாளர், குறித்த காணிளுடன் தொடர்புடைய மக்கள் சிலரை அழைத்து குறித்த காணிகள் கனியமணல் அகழ்விற்காக எடுத்துக்கொள்ளப்போவதாகத் தெரிவித்ததுடன், கருநாட்டுக்கேணி பகுதியில் பதில் காணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கரைதுறைப்பற்று பிரதேசசெயலரின் இந்த நடவடிக்கையால் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் இது தொடர்பில் முறையிட்டதற்கு அமைய, ரவிகரன் நேற்று செவ்வாய்க்கிழமை கொக்கிளாய் பகுதிக்குச் சென்று குறித்த மக்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடலின்போது குறித்த காணியை விடுவித்துத் தர நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரனிடம் மக்கள் கோரியுள்ளநிலையில், இது தொடர்பில் உரியவர்களுடன் பேசி இதுதொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.