நாட்டில் போசாக்கின்மையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் கிளிநொச்சி என்பதுடன் அந்த மாவட்டத்திற்காக அரசாங்கம் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மந்தபோஷணை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த 30ஆண்டுகளாக,குறிப்பாக யுத்தம் முடிவடைந்து 12வருடங்கள் கழிந்த பின்பும் வடக்கு, கிழக்கில் குழந்தைகள் போஷாக்கின்மையோடுதான் பிறந்திருக்கின்றன.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் விதித்த மோசமான பொருளாதார தடைகளினால்தான் தமிழ் மக்கள் போஷாக்கற்றவர்களாக வாழ்ந்தார்கள். உரம், எரிபொருள்,போஷாக்கு உணவுகள் அங்கு அனுப்பப்படவில்லை. இதனால் பல குழந்தைகள் போஷாக்கின்மையாலும் பட்டினியாலும் உயிரிழந்துள்ளார்கள்.
நாட்டில் போஷாக்கின்மையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருப்பது கிளிநொச்சி மாவட்டமே. அதற்கான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளத என கேட்க விரும்புகின்றேன்.
இலங்கைக்கடலில் பிடிக்கப்படும் போஷாக்கான மீனை வடக்கு மக்கள் சாப்பிடுகின்றார்களா? வடக்கில் தற்போது கடலட்டைகள் வளர்ப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்ன்றன. சீன நாட்டின் கோதாவிலே அங்கிருக்கின்ற சில முகவர்கள் ஊடாக அதற்கான காணிகள் பிரித்து வழங்கப்படுகின்றன. இதனால் .அங்கு பாரம்பரியமாக கடற்தொழில் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்கள் கடலட்டைப்பண்ணைகளாக மாறியுள்ளன. இதனால் கடலுணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் சீனாவின் ஒரு நிறுவனம் கடலட்டை குஞ்சுகளை உருவாக்க செயற்பாடுகளை மேற்கொண்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இப்போது அவர்கள் எழுவைதீவு, அனலைதீவு, புங்குடுதீவு போன்ற பகுதிகளில் கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்காக காணிகளை கோருகின்றார்கள். பல நீரோட்டம் இல்லாத நிலங்கள் தனியாரின் பெயர்களில் சீனாவுக்கு வழங்கப்படுகின்றன.
சீனாவின் செயற்பாடுகள் வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகமாக மக்களைப் பாதிக்கின்றது.
கடந்த 3 மாதங்களுக்குள் வடக்கு மாகாணத்தில் சுமார் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளன. இதன்பின்புலத்தில் சீனா உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.