தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும்-அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங்

”இது தனியாக நடக்கும் நினைவுக்கூரல் நிகழ்ச்சி அல்ல. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் நிகழ்வாகவும், இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற குரலாகவும் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. ஆகவே இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு எமது தமிழ் உறவுகளையும் நாங்கள் நினைவு கூர்கின்றோம்,”என பிபிசி தமிழ் ஊடகத்திற்கு   வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் மே 18 நினைவேந்தல் தொடர்பில் கருத்து  தெரிவித்துள்ளார்.

மேலும் “உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்திக்காக வேண்டுகின்றோம். அவர்களின் மனங்களில் இருந்த எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என விரும்பி இந்த இடத்திலே ஒன்று கூடியிருக்கின்றோம். இந்த அநீதிக்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கோரிக்கைது. எமது மக்களை படுகொலை செய்ய காரணமாக இருந்தவர்கள், நீதிமன்றங்களின் முன் கொண்டு வரப்பட்டு சர்வதேச சட்டங்களின்படி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகவே இது நினைவேந்தலுடன் நின்று விடும் நிகழ்ச்சி அல்ல. இது எமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அக ரீதியான ஒரு அறவழி போராட்டமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது” என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார்.