‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விரைவாக நீதி வழங்க வேண்டும்’- ஐ.நா. மனித உரிமை ஆணையர்

விரைவாக நீதி வழங்க வேண்டும்

முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது. இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்  ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய அவர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து, விரைவாக நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்த வர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால், சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாளவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News