நீதித்துறை – அரசியலமைப்பு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் சங்கம் கடிதம்

நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர் நீதித்துறைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் தேவையற்ற மோதலை உருவாக்க பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீதிச் சேவைகள் சங்கம்  உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி கூடிய  நீதிச்சேவைகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை அதிகாரங்களை செயற்படுத்தும் மூன்று முக்கிய நிறுவனங்களான பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.