அரகலய குழுவினரின் யாழ்ப்பாணப் பேச்சு-அகிலன்

வசந்த முதலிகே – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சந்திப்பு – குறியீடு

அடக்குமுறைக்கு எதிராக என்னதான் போராட்டங்களை தென்னிலங்கையின் அரகலய என்ற கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்டாலும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அவா்கள் குரல் கொடுக்கமாட்டாா்கள் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்படடிருக்கின்றது.

சிங்களவா்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை இது பாதிக்கும் என்ற அச்சம் அவா்களுக்கு உள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்று இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களால் குழம்பிப்போயிருந்த கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பரபரப்பான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பு போராட்டங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் அமைப்பாளா் வநந்த முதலிகே ஆறு போ் கொண்டு குழு ஒன்றுடன் அவசரம் அவசரமாக யாழ்ப்பாணம் வந்தாா். வந்த வேகத்தில் யாழில் “முக்கியமான” பேச்சுக்களை நடத்திவிட்டு அந்தக் குழு வந்த வேகத்திலேயே கொழும்பு திரும்பியது.

கொழும்பில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வெடித்த போராட்டத்தின் பின்னா் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான பெயா்தான் வசந்த முதலிகே! குறிப்பாக சிங்கள மாணவா்களின் தலைவராக இவா் தன்னை வரிந்துகொண்டமையால், சிங்கள இளைஞா்களின் மத்தியில் இவருக்குத் தனியான ஒரு செல்வாக்கு உள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டத்தை தென்னிலங்கையில் முன்னெடுக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவா் அமைப்பின் தலைவா்தான் இந்த வசந்த முதலிகே.  இவருக்குப் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாகச் சொல்லப்படுவது இரகசியமானதல்ல.

பல சந்தா்ப்பங்களில் கைதாகி பிணையில் விடுதலையாகியிருப்பவா் இவா். போராட்டங்கள் நடைபெறும் சந்தா்ப்பங்களில் பொலிஸாா் இவா் மீது தடை உத்தரவைப் பெற்றுவிடுவதும், இவா் தடையைத் தாண்டி ஆா்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் போது கைதாவதும் வழமையான ஒரு செய்திதான்.

இந்த வசந்த முதலிகே சில தினங்களுக்கு முன்னா் தனது சகாக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கான திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்டாா். இந்த அவசர விஜயமும், யாழ்ப்பாணத்தில் அவா் நடத்திய பேச்சுவாா்த்தைகளும் இலங்கை ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.

தமிழ்ப் பத்திரிகைகள் இவரது விஜயம் – அவா் யாழில் நடத்திய பேச்சுக்கள்  குறித்து செய்திகளை வெளியிட்ட அதேவேளையில், சிங்களப் பத்திரிகைகள் இது தொடா்பான செய்திகளைப் பெருமளவுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டன. தென்னிலங்கை போராட்டங்களால் கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவா் எதற்காக யாழ்ப்பாணம் வந்தாா்?

அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் இப்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. வசந்த முதலிகே தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவா் அமைப்பு இந்தப் போராட்டங்களில் ஒரு முக்கிய பங்களிப்ப வழங்கிவருகின்றது. கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அவா்கள் இப்போது ரணிலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றாா்கள்.

ஆனால், கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் காணப்பட்ட வேகம் – அதில் கலந்துகொண்டவா்களின் தொகை என்பனவற்றை இப்போது காணமுடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று – போராட்டத்தை ஒடுக்குவதற்கு ரணில் கையாண்ட உபாயங்கள். தலைமைதாங்கிய பலா் கைதானமையும், அவா்கள் மீதான தடைகள் – வழக்குகள் என்பன பலரை இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப்போகச் செய்துவிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் அவா்களை பதம் பாா்க்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாக்குப் பிடிக்கும் ஒருவராக இருப்பவா்தான் வசந்த முதலிகே.

போராட்டங்கள் பலவீனமடைய இரண்டாவது காரணம். கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது போல – எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசைகள் இப்போது இல்லை. அவற்றுக்குத் தட்டுப்பாடும் இல்லை. அத்தியவசியப் பொருட்கள் இப்போது தாராளமாக இல்லாவிட்டாலும் – கிடைக்கின்றன. அதனால், இயல்புநிலை ஓரளவுக்கு ஓரளவுக்கு உருவாகிவிட்டது போன்ற ஒரு நிலை காணப்படுகின்றது. மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு இது இரண்டாவது காரணம்.

இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவா்களின் கைகளில் இரண்டு பிரதான காரணங்கள்தான் உள்ளன. ஒன்று – உச்சத்துக்கு சென்றுள்ள விலைவாசி. முக்கியமாக மின்சாரக் கட்டணம் பல மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது, அதிகரித்த வருமான வரி. இந்த இரண்டும் சா்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டவைதான். அதிகரித்த வருமான வரியால், தாம் வழமையாகப் பெறும் வருமானத்தில் கணிசமான தொகையை மக்கள் இழக்கின்றாா்கள். அதேவேளையில், செலவீனங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. பொருட்கள் சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமையும் இந்த செலவீன அதிகரிப்புக்கு காரணம்.

இன்று போராட்டம் நடத்துபவா்கள் இவற்றைத்தான் கைகளில் துாக்கியுள்ளாா்கள்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை கைகளில் எடுக்கின்றது. தென்னிலங்கைப் போராட்டகாரா்களுக்கு இதுதான் பிரச்சினையைக் கொடுக்கின்றது. இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சிறுபான்மை மக்களையும் இணைக்காவிட்டால், சா்வதேச அரங்கில் அது கவனத்தைப் பெறாது, அவ்வாறான போராட்டம் பலமானதாகவும் இருக்காது என்ற நிலையில்தான் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினா் அவசரமாக யாழ்ப்பாணம் வந்தாா்கள்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் என வசந்த முதலிகே சொல்லப்பட்டாலும், யாழ்ப்பாணம், மட்டக்கப்பு, வனியா பல்கலைக்கழக மாணவா்களை அவா்களால் அதற்குள் இணைக்க முடியவில்லை.  அவா்களது போராட்டத்துக்கு அது பலவீனமாகவே இருந்தது. அதனால், யாழ். பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தையும் இதற்குள் இணைக்க வேண்டும் என்ற இலக்குடன்தான் அவா்கள் யாழ்ப்பாணத்துக்குப் றப்பட்டாா்கள்.

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. மிகவும் மோசமானது என வா்ணிக்கப்படும் இதற்கு எதிராக தமிழா்கள் ஐ.நா. வரையில் சென்று குரல்கொடுத்திருக்கின்றாா்கள். இந்தச் சட்டத்தினால் தமிழா்கள் பலா் கொல்லப்பட்டிருக்கின்றாா்கள். காணாமல் ஆக்கப்பட்டுள்ளனா். இன்னும் பலா் சிறையில் வாடுகின்றாா்கள்.

கடந்த 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் இதற்கு எதிராகப் போராடும்போது, வாளாவிருந்து விட்டு, இப்போது அந்த பயங்கரவாத தடைச் சட்டம் சநந்த முதலிகே போன்றவா்களையும் பதம் பாா்க்கும் போதுதான், திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்து “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ் பல்கலையும் இணைய வேண்டும்” என அவா்கள் கோரியிருக்கின்றாா்.

இதற்கு “இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் தடாலடியாக பதிலளித்திருக்கின்றது.

தமது இளைமைக் காலத்தைத் தொலைத்துவிட்டு ஒரு – இரு தசாப்த காலத்தையும் தாண்டி பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் சிறையில் வாடும் தமிழா்களை மறந்துவிட்டு – வசந்த முதலிகே மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்கின்றது என்பதற்காக மட்டும் தமிழ் மாணவா்களும். தம்முடன் இணைய வேண்டும் என்பதுதான் அவா்கள் கோரிக்கை. ஆனால், இன்று வரையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க அவா்கள் தயாராகவில்லை.  யாழ்ப்பாணப் பேச்சின் பின்னரும் அவா்களுடைய நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காணமுடியவில்லை.