பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுமொத்தமான ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே அதிகாரங்களைப் பரவலாக்கி புறையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும் என்ற அடிப்படையில் அவர் உரையாற்றி இருந்தாலும், காவல்துறை அதிகாரமற்ற அதிகாரப் பரவலாக்கல், ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்பதை எங்களால் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையின் 75வது சுதந்திர தினம் இந்த வாரம் கொண்டாடப்பட்டிருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததோ என்னவோ ஆனால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் இல்லாமலே இருக்கின்றோம்.
ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் சுதந்திரம் அடைந்தது இந்த நாடு. சுதந்திரம் அடைந்த போது இந்த நாட்டின் பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்திற்கு நிகராக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பொருளாதார ரீதியிலே ஜப்பான் எங்கிருக்கின்றது, இலங்கை எங்கிருக்கின்றது என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
இந்தியாவைப் பொருத்தமட்டில் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போரடி சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான், பங்காளதேசம் போன்றன ஒன்றாகவே இருந்தன. பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்தாலும் பாகிஸ்தானை விட அதிகமான முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வது மாத்திரமல்லாமல் அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், வளமாகவும் கூட இருந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கெல்லாம் முஸ்லீம்கள் வாழும் பிரசேங்களிலே இந்துக் கோயில்களோ இந்துக்கள் வாழும் பிரதேசங்களிலே பள்ளிவாசல்களோ அடாத்தாகவோ பலாத்காரமாக அமைக்கப்படுவதில்லை.
ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் பேசும் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த 1948ல் இருந்து முப்பது ஆண்டுகள் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாகவும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாகவும் போராடி வந்திருக்கின்றார்கள்.
1949ம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்தைக் கபளீகரம் செய்வதற்காகவும், அங்குள்ள தமிழ், தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்குமான வேலைத்திட்டத்தை கல்லோயாக் குடியேற்றம் மூலம் ஆரம்பித்தார்.
1921ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெறுமனே 0.5 வீதம் சிங்கள மக்கள் வாழ்ந்த வரலாறு இருக்கும் போது இன்று 24 வீதமாக அவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள் என்றால் கல்லோய தொடக்கம், சேருவில, கந்தளாய் வரை குடியேற்றங்களை ஆரம்பித்தது மாத்திரமல்லாமல், அம்பாறை, சேருவில போன்ற தனித் தேர்தல் தெகுதிகளையும் உருவாக்கி இன்று 24 வீதமாக மாற்றியிருக்கின்றீர்கள்.
1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள், ஸ்ரீ யைக் கொண்டு வந்தீர்கள். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பிரச்சனைகள் இங்கு நடந்து வந்திருக்கின்றன. 1958, 1978, 1983 ஆகிய ஆண்டுகளிலே பாரிய இனக்கலவரங்களை உண்டுபண்ணியது மாத்திரமல்லாமல் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் மூலமாக தெற்கிலிருந்து வடகிழக்கிற்குக் கூடத் தமிழர்கள் செல்லமுடியாமல் கடல்வழியாக அனுப்பிய வரலாறுகளும் இருக்கின்றன.
அதுமாத்திரமல்லாமல் வெலிகடை வெஞ்சிறையில் 53 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஆயுதப் போராட்டத்தை முதல் முதலில் தொடக்கிய தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களான குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டர்கள்.
குட்டிமணி அவர்கள் நீதிமன்றத்திலே உரையாற்றும் போது எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. அந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் நான் ஒரு குட்டிமணி இறப்பேன். ஆனால் அதன் பின் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் இந்த நாட்டிலே வடகிழக்கிலே உருவாகுவார்கள். அவர்கள் மூலமாக தமிழீழம் மலரும். மலரும் தமிழீழத்தை எனது கண்களால் நான் பார்க்க வேண்டும். எனவே என்னுடைய கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியதற்காக அவரைக் கொன்றதோடு மாத்திரமல்லாமல், அவரது கண்களைத் தோண்டி சப்பாத்துக் கால்களில் மிதித்த வரலாறுகள் கூட இருக்கின்றது.
1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப்போராட்டம் வீறுகொண்டதை அனைவரும் அறிவோம்;. வடகிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். மிகவும் உக்கிரமாக இந்த நாட்டிலே போர் நடந்த வரலாறுகள் இருக்கின்றன. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் நாங்கள் தனி ஈழம்பெற்றிருப்போம், தனிநாடு மலர்ந்திருக்கும் என்று இன்றும் தமிழர்கள் கூறுகின்றார்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட 13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் போது அந்த அரசியலமைப்பை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிறைவேற்றாமல் இருப்பதென்பது அரசாங்கமே அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும்.
எனக்கு முன் உரையாற்றிய உதயகம்மன்பில அவர்கள் 13வது திருத்தத்தின் பின்னர் இந்த நாட்டை 7 ஜனாதிபதிகள் ஆட்சி செய்திருந்தார்கள் யாருமே பொலிஸ் அதிகாரத்தை அமுலாக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதிலிருந்து நீங்களே அரசியலமைப்பை மீறிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே தெளிவாகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது இந்த நாடு பௌத்த நாடு பௌத்த பிக்குகளை எதிர்த்துக் கொண்டு எதனையும் செய்ய முடியது அவர்களைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டிலே ஒரு தீர்வைத் தர முடியாது என்ற கோணத்திலே உரையாற்றியிருந்தார்.
நான் அவருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் 2015ல் அவரை ஜனாதிபதி ஆக்;கியது சிறுபான்மை மக்கள். ஆனால் இன்று அந்த மக்களது கருத்தைக் கூட கருத்தில் எடுக்காமல் அவர் இந்த உரையை ஆற்றியிருப்பதையிட்டு அவர் குறித்தும், அவருக்காக வடகிழக்கு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டேன் என்ற அடிப்படையிலும் நான் வெட்கப்படுகின்றேன்.
ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதன் காரணாகவே 13வது திருத்தச் சட்டம் உருவானது 13வது திருத்தம் என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியற் தீர்வல்ல. தமிழ் மக்களின் அரசியற் தீர்வுக்கு இதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கருதுகின்றோம். எனவே எங்களுக்குத் தேவை மீளப்பெறமுடியாத ஒரு சமஸ்டி என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களையே மீளப்பெற்ற வரலாறுகளே இருக்கின்றன.
நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் 13வது திருத்தத்தை எரிக்கின்றார்கள். நீங்கள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரிக்;கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்பட்ட போது கொழும்பில் இருந்து கண்டிக்கு யாத்திரை சென்றது எதற்காக? அன்று அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குச் சென்றிருக்காது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.