இலங்கையின் மறுசீரமைப்புக்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கத்தயார் – அமெரிக்கா

முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் அனைவரும் இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

சீனாவினால் கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்து, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி தமது பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்கு இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையானது சுமார் 75 வருடகாலமாக அமெரிக்காவுடன் இராஜதந்திரத்தொடர்புகளைப் பேணிவரும் நிலையில், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்கள் ஆகிவற்றை உறுதிசெய்வதை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்கத்தூதுவர் உறுதியளித்துள்ளார்.