தமிழ் மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன், மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின்போது, அநுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டு வரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அநுர அரசாங்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கியராஜய’ அரசியலமைப்பு வரைவை அரசியலமைப்பாக கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த வரைவானது இதுவரை இருந்து வருகின்ற அரசியலமைப்பில் உள்ளதைப் போன்ற ஒற்றை ஆட்சி முறையாகும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரைவு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாகும். இவ்வாறான தமிழ் மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும் அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அத்துடன் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டும் வகையில் ‘சமஸ்டி’ அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோரியுள்ளனர்.
அதன் மூலமே தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



