இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் காலம் காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வு எட்ட முடியும் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுமா ? என்பதை அறியவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவிய போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டார்கள்.
13 பிளஸ் இணக்கம் தெரிவித்தார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையான அதிகாரங்களுடன் பகிரக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளது.
அதிகாரங்களுடன் மாகாண சபை செயல்படும் போது எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அனைத்து மாகாணங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் உரித்துடையதாக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரதான விடயம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது இளம் தலைமுறையினர் இனம்,மதம் பேதம் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள எமது புலம்பெயர் உறவுகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் முதலீடு செய்ய வேண்டுமாயின் வங்கிக் கட்டமைப்பு சில விடயங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.