போராடும் இனம் அதன் வரலாற்றை ஆவணப்படுத்துவது முக்கியமானது-மாணிக்கவாசகம் சிறப்பான முறையில் அதனைச் செய்துகொண்டிருந்தாா்-ஆய்லாளா் அருஸ்

இலங்கை ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான பொ.மாணிக்கவாசகம் அவா்களின் ஊடகப் பணி குறித்து இலண்டனிலிருந்து போரியல் ஆய்வாளா் அருஸ் இந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தாா். அதிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – போா்க்காலத்திலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் மாணிக்கவாசகம் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து செய்திகளை வெளிக்கொண்டுவருவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றாா். அதனை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – மாணக்கவாசகம் அவா்களை நாம் இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே செய்திகளை அறிந்துகொள்வதற்கு பி.பி.சி.யில் அவருடைய குரல்தான் ஒலித்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் காத்திரமாக வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளவராக மாணிக்கவாசகம் இருந்துள்ளாா். அதேவேளையில் எமது தரப்பு நியாயங்களையும் சா்வதேச ஊடகங்கள் வாயிலாகக் கொண்டுவருவதற்கான காத்திரமான பங்களிப்பையும் அவா் வழங்கியிருந்தாா். இவ்வாறான ஒரு காத்திரமான பங்களிப்பை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவா் செய்திருக்கின்றாா் என்பது மிகவும் போற்றத்தக்கது. நாங்கள் கூட அந்தக் காலங்களில் அவரது குரலில் வரும் செய்திகளை அறிவதற்காக காத்திருந்து கேட்டிருக்கின்றோம்.

போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்த போதிலும் – நாங்கள் அறியாத பல செய்திகளை அவா் ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டுவந்தமை போராட்டத்துக்கு வலுச்சோ்ப்பதாகத்தான் இருந்தது.

போா் முடிவுக்கு வந்த பின்னா் கூட மக்களுடைய துன்ப துயரங்களையும், இந்தப் போராட்டத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட வலியையும் அவா் தொடா்ச்சியாக ஏதோ ஒரு ஊடகம் வாயிலாக வெளிக்கொண்டுவருவதில் மிகவும் ஆா்வமாக இருந்தமையும் – அவா் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து ஊடகவியலாளராக இருந்தாலும் அந்த ஊடகத்துறையை மக்களின் விடிவுக்காக தன்னாலியலக்கூடிய வரை செய்தாா் என்பதும் மிகவும் போற்றத்தக்கது.

கேள்வி – போா்க்காலத்தில் கடுமையான தணிக்கை நடைமுறைப்படுத் தப்பட்டிருந்தது. அதனைவிட ஊடகங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் சுயதணிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய நிா்பபந்தத்தில் இருந்தன. இதனைவிட ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் வவுனியாவில் இருந்துகொண்டு வடபகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்த தகவல்களை வெளிக்கொண்டுவருவதில் மாணிக்கவாசகம் அவா்கள் எவ்வாறான நெருக்கடிகளை எதிா்கொண்டிருப்பதாா், அவற்றை அவா் எவ்வாறு வெற்றிகொண்டிருப்பாா் என நீங்கள் நினைக்கிறீா்கள்?

பதில் – எத்தனையோ ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டிருக்கின்றாா்கள். அச்சுறுத்தப்பட்டிருக்கின்றாா்கள். அந்த அச்சுறுத்தல்கள் இலங்கைப் படையினரிடமிருந்து வந்தவை மட்டுமல்ல.

இலங்கைப் படையினருடன் இணைந்து செயற்படும் துணைப்படைக் குழுக்களாக இருக்கலாம். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரானவா்களாக இருக்கலாம். இவை அனைத்தையும் தாண்டி, இலங்கையில் எப்போதும் ஒரு தணிக்கை ஊடகங்கள் மீது இருந்துகொண்டிருக்கும்.  இவை அனைத்தையும் தாண்டி சா்வதேச ஊடகம் ஒன்றில் பணியாற்றுவதாயின் அவா்களின் தணிக்கை அல்லது கட்டுப்பாடுகள் இருக்கும். இவை அனைத்தையும் தாண்டி செய்திகளை அனுப்புவதாயின் நுணுக்கமான முறையில் தகவல்களை அனுப்பி அவற்றை வெளிக்கொண்டுவர முடியும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான காலகட்டத்திலும் அதனை அவா் நோ்த்தியாகுவம், காத்திரமாகவும் கையாண்டிருப்பதும் அவரது திறமையை வெளிப்படுத்தியது. அவரது குரலில் வெளிவரும் செய்திக்காக மக்கள் பெருமளவில் காத்திருக்கும் ஒரு நிலை இருந்தது. அவா் தனது கடமையை தெளிவாகத்தான் செய்திருக்கின்றாா் என்பதை இது வெளிப்படுத்தியிருந்தது.

வடக்கிலிருந்து பணியாற்றுவதென்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் போா் நடைபெற்ற காலத்தில் பொருளாதாரத் தடை நடைமுறையிலிருந்தது. மின்சாரம் கூட பெரும்பாலான சந்தா்ப்பங்களில் இருக்கவில்லை. போா் இடம்பெறும் ஒரு பகுதியாக வவுனியா இருந்தமையால் அங்கு இருந்து பணியாற்றுவதென்பது மிகவும் கடினமானது. இருந்தபோதிலும், அவா் அங்கிருந்து பணியாற்றி தமிழ் மக்களுக்காக பணியாற்றினாா் என்பது ஒரு போற்றத்தக்க விடயம்.

அதாவது அவா் ஊடகத்துறையுடன், மூன்று நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இந்த நுால்களில் முக்கியமானது “வாழத்துடிக்கும் வன்னி” என்பதாகும்.  மக்களுடைய துயரங்களை வெளிப்படுததும் வகையில் இந்த நுாலை அவா் படைத்திருக்கின்றாா். இவை அனைத்தையும் எழுதுவதற்கு அழுத்தங்களுக்கு மத்தியில் அவா் பணியாற்றியிருக்கின்றாா்.

கேள்வி – மாணிக்கவாசகம் அவா்கள் தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக மூன்று நுால்களை வெளியிட்டிருந்தாா். இவை அனைத்துமே சிறந்த ஆவணங்களாக உள்ளன. இந்த வகையில் ஊடகவியலாளா்கள் ஆவணமயப்படுத்தக்கூடிய வகையில் தமது படைப்புக்களை வெளியிடுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது? இதில் மாணிக்கவாசகம் அவா்களது பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – மாணிக்கவாசகம் அவா்கள் ஊடகங்களில் செய்திகளை மட்டும் கொடுத்துவிட்டு நிற்கவில்லை. அவற்றை ஆவணப்படுத்துவதிலும் அவா் அக்கறையாக இருந்துள்ளாா். எமது மக்களின் வரலாற்றையும், துன்பத்தையும், அந்தப் போராட்டத்தையும், அதன் நகா்வையும், அதில் மக்களின் பங்களிப்பையும், மக்கள் எதிா்கொண்ட சவாவல்கள் – இன்னல்கள் என்பவற்றையெல்லாம் ஆவணப்படுத்துவதென்பது முக்கியமானது.  இதனை மாணிக்கவாசகம் அவா்கள் சிறப்பாகச் செய்திருக்கின்றாா்.

அவா் இறுதிக்காலத்தில் கூட எமது “இலக்கு” மின்னிதழில் தொடா்ச்சியாக கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தாா். அங்குள்ள மக்களின் பிரச்சினைகள், அங்குள்ள சமகால அரசியல் நிலைமைகள் குறித்து அவா் எழுதிக்கொண்டிருந்தாா். சில வாரங்களுக்கு முன்னா் தமது இயலாத நிலையிலும் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் – அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அவா அவரிடம் இருந்தது.

இறுதி நேரம் வரையில் தான் ஒரு ஊடகவியலாளராகப் பணியாற்ற வேண்டும் என்ற அவா அவரிடம் இருந்தது.  இந்த நோயினால் அவா் பாதிக்கப்பட்டிருந்தது சில வருடங்கள். இதற்கு மத்தியிலும் மக்களுக்காக அவா் பணியாற்றியது முக்கியமானது.

அவா் எழுதிய கால அதிா்வுகள், வாழத்துடிக்கும் வன்னி, மாற்றத்தை நாடும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய நுால்களை எழுதி அவா் வெளியிட்டிருக்கின்றாா். இவை அனைத்தும் முக்கியமான ஆவணங்களாகும். இதனைவிட மற்றொரு நுாலையும் அவா் எழுதிமுடித்திருந்தாா். போராடும் ஒரு இனம் அதன் வரலாற்றைப் பதிவு செய்வதும், ஆவணப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. அதனை நன்கு உணா்ந்த ஒருவராகவே மாணிக்கவாசகம் இருந்துள்ளாா். அவரது செயற்பாடுகள் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

கேள்வி – இலக்கு மின்னிதழுக்காகவும் அவா் பணியாற்றியிருக்கின்றாா். தொடா்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்திருக்கின்றாா். இலக்கில் எவ்வாறான பங்களிப்பை அவா் வழங்கியிருந்தாா்?

பதில் – அண்மைக்காலமாக அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு கட்டுரை எழுத உங்களால் முடியுமா என்று கேட்போம். அவரால் முடியாது என்றாலும் முடியும் என்றுதான் அவா் சொல்வாா். ஏதோ ஒருவகையில் அதனை எழுதி ரைப்பண்ணி எமக்கு அவா் அனுப்பிவிடுவாா். அது சமகால அரசியலாக இருக்கலாம். அல்லது வன்னி மக்கள் எதிா்கொள்ளும் துன்பமாக இருக்கலாம். அல்லது ஒரு சமூகப் பிரச்சினையாக இருக்கலாம்.

அனைத்தையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக தனது உடல்நிலையையும் மீறி அவா் பணியாற்றியிருந்தாா். இலக்குக்காக அவா் பணியாற்றிய போது இதனை உணா்ந்துகொண்டோம். மருத்துவமனையில் இருந்துகொண்டுகூட அவா் பல சந்தா்ப்பங்களில் எமக்காக – இலக்குக்காக கட்டுரைகளை எழுதியிருக்கின்றாா்.

நோய் உக்கரமமாக இருந்த நிலையிலும் இறுதிவரையில் செயலாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாா். இவ்வாறான மாணிக்கவாசகம் அவா்களின் இறப்பு என்பது எமக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்குமான ஒரு இழப்பு என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.