கிள்ளிக் கொடுக்கவும் தயக்கம் – துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கையில் காலடியெடுத்து வைத்து இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றபோதும் அம்மக்கள் மீதான பாரபட்சங்கள், இனவாத முன்னெடுப்புக்கள் என்பன இன்னும் ஓய்ந்ததாக இல்லை. இம்மக்கள் மீதான இத்தகைய பிற்போக்கான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்படும். அதுமட்டுமல்லாது சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றை கட்டியெழுப்பவும் நாட்டுப்பற்றை மேலோங்கச் செய்வதற்கும் அது உந்துசக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

“எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா இனங்களுக்கும் சமமான உரிமைகள் உண்டு. அதனை அனுபவிக்கச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் இந்த கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியமாகி இருக்கின்றது? எல்லா சமூகங்களும் ” இலங்கையர் ” என்ற பொது வரையறைக்குள் நோக்கப்பட்ட்டு உரிய உரிமைகளை அனுபவிக்கின்றார்களா? என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

இதனடிப்படையில் நோக்குகையில் இலங்கையில் உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட அல்லது கேட்டும் கிடைக்காத ஒரு சமூகமாக இந்திய வம்சாவளி மலையக சமூகம் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். இச்சமூகம் மேலெழும்ப முனையும் போதெல்லாம் தலையில் பலத்த குட்டு விழுவது சர்வ சாதாரணமாகி விட்டது.இச்சமூகத்தினரின் பின்தங்கிய நிலைமையினை உணர்ந்து  “அள்ளிக் கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வராவிட்டாலும் கிள்ளிக் கொடுப்பதற்கும் ” தயக்கம் காட்டி வருவது வேதனைக்குரிய விடயமேயாகும்.

இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொடரும் இனவாத நடவடிக்கைகள் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஆணிவேரை அசைத்திருப்பதோடு அவர்களின் தேசிய நீரோட்டக் கனவையும் தகர்த்திருக்கின்றன.இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டில் காலடியெடுத்து வைத்தது முதல் அவர்களை அடிமைகளைப் போன்று நடாத்தும் வழிமுறைகளே தொடர்ந்தன.அம்மக்களின் சனத்தொகையைக் குறைத்து அவர்களை சகல துறைகளிலும் ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு குறைவு இருக்கவில்லை.

ஒப்பந்தங்களின் ஊடாக இம்மக்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்பும் முயற்சிக்கு வலுசேர்க்கப்பட்டது.இதற்கேற்ப 1971 இற்கும் 1984 இற்கும் இடையில் கணிசமான இந்திய வம்சாவளியினர் தாயகம் திரும்பும் நிலைமை ஏற்பட்டது.இதனடிப்படையில் 1971 இல் 25,384 பேர் தாயகம் திரும்பினர்.1972 இல் 32,877,1976 இல் 45,891, 1978 இல் 29,438,1980 இல் 18,867, 1982 இல் 28,120, 1984 இல் 31,338 பேர் தாயகம் திரும்பியிருந்தனர்.1971 இற்கும் 1984 இற்கும் இடையில் இவ்வாறாக நான்கு இலட்சத்து 46,338 பேர் தாயகம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இதனால் இந்திய வம்சாவளியினரின் செறிவு, சனத்தொகை என்பன பாதிக்கப்பட்ட துடன் அவர்கள் அரசியல், சமூக ரீதியாகவும் பின்னடைவு காணும் நிலை மேலெழுந்தது.

இதேவேளை இந்திய வம்சாவளியினர் சிலர் இலங்கை தமிழர் என்ற ரீதியில் பிழையான பதிவுகளை மேற்கொண்டமை போன்ற நிலைமைகளும் இந்திய வம்சாவளியினரின் சனத்தொகையில் வீழ்ச்சியினை வெளிப்படுத்திக் காட்டியது.

1911 இல் இலங்கையின் மொத்த சனத்தொகையில் இந்திய வம்சாவளி மக்களின் தொகை 12.9 வீதமாகக் காணப்பட்டது.1931 இல் இது 15.4,1953 இல் 12.0, 1971 இல் 9.3, 1981 இல் 5.5, 2012 இல் 4.1 வீதமாக அமைந்திருந்தது.

இதேவேளை இந்திய வம்சாவளியினர் தம்மை இலங்கை தமிழர்கள் என்றவாறு பிழையான பதிவுகளை மேற்கொண்டமையும் இம்மக்களின வீழ்ச்சிக்கு ஏதுவானதெனலாம். தேசிய மட்டத்தில் இம்மக்கள் தொகையின் வீழ்ச்சி நிலை வெளிப்பாடு இம்மக்களுக்கு  கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்காமல் போவதற்கும் ஏதுவானது.இது ஒரு துரதிஷ்டமேயாகும்.

சிறுதோட்ட அபிவிருத்தி

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் வறுமையின் உக்கிரத்தில் வாழ்பவர்கள். நாட்டின் ஏனைய இனங்களைவிட வறுமையின் உச்சம் இவர்களிடத்தில் பிரதிபலிக்கின்றது. 1995/96 இல் நகர்ப்புற வறுமை 14 வீதமாகவும், கிராமப்புற வறுமை 30.9 வீதமாகவும் காணப்பட்ட நிலையில் பெருந்தோட்ட வறுமை 38.4 வீதமாகக் காணப்பட்டது.இவ்வாண்டின் தேசிய வறுமை நிலை வீதம் 28.8 ஆகும்.இதேவேளை 2002 இல் 30.0, 2006/07 இல் 32.0, 2009/10 இல் 9.2 என்ற வீதத்தில் பெருந்தோட்ட வறுமை நிலை காணப்பட்டதோடு நகரம், கிராமம் என்பதைக் காட்டிலும் இது அதிகமாகும்.

தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், கிராமிய மட்டத்திலும், வேளாண்மை துறையிலும், உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் காணப்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஊக்கமளிக்கும் உத்வேகமொன்றினைக் கொண்டிருந்ததுடன் வறுமையைக் குறைக்கவும் உதவியதாகவும் அரச தரப்பு செய்திகள் வலியுறுத்தியபோதும் பெருந்தோட்ட மக்களுக்கு அது கை கொடுக்கவில்லை.

வறுமை ஒழிப்பு கருதி இலங்கையில் ஜனசவிய, சமுர்த்தி உள்ளிட்ட பல திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.எனினும் இத்தகைய திட்டங்களால் கிராமப்புற பெரும்பான்மை மக்களே அதிகளவு நன்மையினைப் பெற்றுக் கொண்ட நிலையில் பெருந்தோட்ட மக்களின் வறுமைக்கு அத்திட்டங்கள் தோள் கொடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.இத்திட்டங்களுக்கு உரிய பயனாளிகளை தெரிவு செய்வதில் பாரபட்சம் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பெருந்தோட்ட இந்திய வம்சாவளியினரின் வறுமை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்திய வம்சாவளியினர் மீதான கல்வி ரீதியான பாரபட்சம் சுதந்திரத்துக்கு முன்னதாகவே ஆரம்பித்து விட்டது.”தமது சொந்த நாட்டிலேயே மிகவும் இழிவான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ்க் கூலிக்கு எதனையும் விளங்கிக் கொள்ளக் கூடிய உள ஆற்றல் இல்லை.எனவே அவனை மிஷனரிமாருக்கு பயனுள்ள வகையில் உருவாக்கிக்கொள்ள ஏதாவது கொஞ்சம் சொல்லித்தந்தால் அதுவே போதுமானது.இந்த அடிப்படையில்தான் தோட்டப் பாடசாலைகள் முக்கியமானவை.எனினும் கொஞ்சம் கூடக்குறைய கல்வியை இவர்களுக்கு வழங்கிவிட்டால் அது இவர்களை தோட்டத் தொழிலுக்கு மட்டுமல்ல வேறு எதற்குமே லாயக்கற்றவர்களாக்கிவிடும்.

கல்லி என்பது அவர்களுக்கு பரிச்சயமில்லாத ஆடம்பரப் பொருள் ” என்ற சிந்தனைகளே காலனித்துவ தோட்ட நிர்வாகிகளின் எண்ணத்தில் எதிரொலித்தன.சுதந்திரத்துக்குப் பின்னரும் கூட இந்திய வம்சாவளியினரின் எழுச்சியில் காத்திரமான பங்களிப்பை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.இதனையே பேராசிரியர் சுவர்ணா ஜயவீர போன்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை.ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு.அதாவது தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு பெருந்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது.சுதந்திரத்துக்கு பின்னரான சமூக அபிவிருத்திக் கொள்கைகளும் கூட அவர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று பேராசிரியர் சுவர்ணா ஜயவீர கூறுவதிலிருந்து இந்திய வம்சாவளியினர் மீதான ஆட்சியாளர்களின் பாரபட்சத்தினைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

சுகாதார மேம்பாடு தொடர்பான தேசிய வேலைத்திட்டங்கள் பெருந்தோட்டங்களை வந்தடைவதில் இழுபறிகள் தொடர்கின்றன.மேலும் அரசியல்,, தொழில்வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, மருத்துவம் போன்றபல துறைகளிலும் நிலவும் பாரபட்சம் இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்துக்கு தடையாகியுள்ளது.இதேவேளை பெருந்தோட்டத் தொழிற்றுறையை இல்லாதொழித்து சிறுதோட்ட அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.1972 இல் சிறு தோட்டங்கள் 25 வீதமாகவும்,பெருந்தோட்டங்கள் 75 வீதமாகவும் காணப்பட்டன.இது 1992 இல் ஐம்பதுக்கு ஐம்பது என்றும் 2022 இல் 25 வீதம் பெருந்தோட்டங்கள், 75 வீதம் சிறு தோட்டங்கள் என்றும் நிலைமை மாறியுள்ளது.2050 ம் ஆண்டு ஆகும்போது இலங்கையில் ஒரு வீதம் பெருந்தோட்டங்களும், 99 வீதம் சிறுதோட்டங்களும் என்றவாறு அமைப்பதற்கு தேசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் 1995 இல் 168.8 மில்லியன் கிலோ கிராம் பங்களிப்பினை பெருந்தோட்டங்கள் வழங்கி இருந்தன.இவ்வாண்டில் சிறு தோட்டங்களின் தேயிலை உற்பத்தி 111.3 மில்லியன் கிலோ கிராமாக இருந்தது.எனினும் பின்வந்த காலங்களில் சிறு தோட்ட தேயிலை உற்பத்தியானது படிப்படியாக பெருந்தோட்டத்தை முந்திச் சென்றது.இதற்கேற்ப 2005 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 111.5 மில்லியன் கிலோ கிராமாகவும், சிறு தோட்டங்களில் தேயிலை உற்பத்தி 205.7 மில்லியன் கிலோ கிராமாகவும் காணப்பட்டது. 2017 இல் இவ்விரு துறைகளுக்குமான இடைவெளி மேலும் அதிகமாக இருந்தது.

இதற்கேற்ப 2017 இல் சிறு தோட்ட தேயிலை உற்பத்தி 244 மில்லியன் கிலோ கிராமாக இருந்த அதேவேளை பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 104 மில்லியன் கிலோ கிராமாக வீழ்ச்சியை சந்தித்தது.இவ்வாறாக பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையவும், சிறு தோட்ட தேயிலை உற்பத்தி மேலெழும்பவும் ஆட்சியாளர்களின் பாரபட்சமான கவனிப்புகளே காரணமாகின.சிறுதோட்டங்களை அரவணைத்த ஆட்சியாளர்கள் பெருந்தோட்டங்களை கை கழுவினர்.இதன் தொடர்ச்சி இன்னும் ஓய்ந்ததாக இல்லை என்பதையும் கூறியாக வேண்டும்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேவைகள் குறித்து ஆராய்வதற்கு அவ்வப்போது ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.இவ்வாறாக 1992 இல் தோட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி ஆராய்வதற்காக  ஏற்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முக்கியமானதாகும்.இவ்வாணைக்குழு இம்மக்களின பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறியபோதும் சாதக விளைவுகள் உரியவாறு இடம்பெறாமை வருந்தத்தக்க ஒரு விடயமேயாகும்.இந்நிலையில் சமகாலத்திலும் இத்தகைய முன்னெடுப்புக்களை அவதானிக்க முடிகின்றது.எனினும் இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே சொல்லத் தோன்றுகின்றது.ஆணைக்குழுக்களை நியமிப்பதால் மட்டும் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

ஆக்கபூர்வமான, அர்த்தபுஷ்டியான செயற்பாடுகளும் அவசியமாகும்.வெறுமனே ஆணைக்குழுக்களை அமைத்து இம்மக்களின பிரச்சினைகளை இழுத்தடிப்பதை விடுத்து இவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இதனூடாக இம்மக்களின வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் .ஐக்கியத்துக்கும்  இது உந்துசக்தியாகும்.

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் இது தொடர்பாக ஆழமாகவே அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.பாரபட்சம் களையப்படுமிடத்து அது இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு வாய்ப்பாக அமைவதோடு நல்லிணக்கம், சமாதானம், சமத்துவம் என்பன  இலங்கையில் உறுதிபடுவதற்கும் அது அடித்தளமாக அமையும் என்று அமைச்சர் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றமை இங்கு நோக்கத்தக்கதாகும்.