உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அவசியமான 10 முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று சிவில் சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்துத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மட்டக்களப்பு சமாதானக் குழுமம், மட்டக்களப்பு நீதிக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
தென்னாபிரிக்கா, ஜப்பான் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக அறியமுடிகின்றது. கடந்த சில தசாப்தங்களாக நாம் பார்த்த அரச ஆணைக்குழுக்கள், விசாரணை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறைகளின் தொடர் தோல்வியை அடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதன்படி வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார், முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் ‘விரைவு சேகரிப்பு முறைமை’ அடிப்படையில் சேகரிக்கப்பட்டு, அவற்றின் பிரதிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.
ஏற்கனவே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணை செயன்முறைகள் ஒருவருடகாலத்துக்குள் பூர்த்திசெய்யப்பட்டு, அதன் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
இதில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்த 158 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டமை, 1990 செப்டெம்பர் 9 ஆம் திகதி சத்துருக்கொண்டாம் இராணுவ முகாமைச் சூழவுள்ள 4 கிராமங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட 184 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டமை, 2009 மே 5 ஆம் திகதி மட்டக்களப்பு நகரத்தில் 4 இளவயது ஆண்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமை ஆகிய வழக்குகளும் உள்ளடக்கப்படவேண்டும்.
அடுத்ததாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தமது அன்புக்குரியவர்கள் எந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர் என்பதை பல ஆணைக்குழுக்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனவே கடந்த 4 தசாப்தகாலத்தில் இயங்கிய இராணுவ முகாம்கள், அவ்வனைத்து முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த 4 தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து இராணுவ விசாரணைகள் தொடர்பான தகவல்களும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் ஏனைய ஆயுதக்குழுக்களால் நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமலாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் திரட்டப்பட்ட அனைத்துத் தரவுகள் மற்றும் ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
அதேபோன்று புளொட், ஈ.பி.டி.பி உள்ளிட்ட அனைத்து ஆயுதக்குழுக்களும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய கடத்தல்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடல், உயிரிழந்தவர்களை நினைவுகூரல் என்பன உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்படவேண்டும்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் அதேவேளை, அதற்கு சமனான மிகமோசமான சரத்துக்களை உள்ளடக்கிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.