காசாவில் 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர உதவி’ தேவை!

Israel strikes and seals off Gaza after incursion by Hamas, which vows to execute hostages - WHYY

காசாவில் உள்ள 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என உலக உணவுத் திட்ட (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் திகதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94,761 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், அதேசமயம் 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். 11மாதங்களாக போர் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் அதிகப்படியான பள்ளிகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கல்வித் துறையில் பணிபுரியும் 750-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசாவில் உள்ள 6,30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

கடந்த மாதத்தில் 16 பள்ளிக் கட்டிடங்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், குழந்தைகள் படிக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு இன்னும் ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP-The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதோடு போர் நிறுத்தமும் தேவைப்படுகிறது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டர்க் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனர்கள் உயிர்வாழ போராடுகிறார்கள், கிட்டத்தட்ட 19 இலட்சம் மக்கள் பலமுறை பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்த மோதலை விரையில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.