அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது  நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையிலும் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர்.

நெதன்யாகுவின் இந்த பயணம்,  ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் – இது மற்ற உலகத் தலைவர்களை விட அதிகமாகும்.

இந்த நிலையில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மட்டுமின்றி, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான அதன் ஆதரவைத் துண்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்குமாறு நெதன்யாகு ட்ரம்ப்பை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்குப் பதில் நடவடிக்கையாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் பரிந்துரைத்துள்ளது, ஆனால் பிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

வெள்ளை மாளிகை சந்திப்பிற்கு முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நாடு ‘அவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்குப் பணியாது’ என்று எச்சரித்திருந்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ட்ரம்ப் அவருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.

இது தொடர்பாக ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு “மிகவும் நன்றாக” இருந்தது என்று கூறினார்.

“ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தவிர, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை” என்றும் ஓர் ஒப்பந்தமே தனது “விருப்பம்” என்றும், ஆனால் அப்படி ஒன்றை எட்ட முடியாவிட்டால் “அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்” என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும், அவர்களது “நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உறவை” தொடர ஒப்புக்கொண்டதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.