போர் நிறுத்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகிய அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் இப்போது அங்கீகரித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் வழங்குவதற்கு முன் உரையாற்றிய நெதன்யாகு, “நாம் ஒரு முக்கியமான முன்னேற்றத்தின் (தருணத்தில்) இருக்கிறோம். நமது போர் நோக்கங்களை அடைவதற்காக இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் போராடியுள்ளோம், மேலும் பணயக்கைதிகள் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் அனைவரையும் கொண்டு வருவதே மைய நோக்கங்களில் ஒன்றாகும். நாம் அந்த இலக்கை அடையப் போகிறோம்.” என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலத்தீனிய கைதிகளை விடுவிக்கும்; காஸாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் திரும்பப் பெறத் தொடங்கும்; நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டிரக்குகள் காஸாவுக்குள் மக்களுக்கான உதவிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.