பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட பலர் பலி

6 UNRWA staff killed in Israeli attack on UN school in Gaza: Guterres

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்றவேளை அங்கு 5000க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் யுத்தம் ஆரம்பித்தது முதல் இதுவரை ஐந்து தடவைகள் இந்த பாடசாலை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.இந்த பாடசாலையில் இடம்பெயர்ந்த சுமார் 12000 பேர் தங்கியுள்ளனர் என ஐநா மேலும் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளை தொடர்ச்சியாக தாக்கிவரும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினை இலக்குவைப்பதாக தெரிவித்துவருகின்றது.