‘தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை எமக்குண்டு’: லெபனான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இராணுவத் தளங்களைக் குறிவைத்து  தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தேசத்தையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கான உரிமை மற்றும் கடமை இஸ்ரேலுக்கு உள்ளது  என்ப்பதால் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ளோம்” என ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் ஃபவத் ஷுக்ர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக  தாக்குதல் தொடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு போன்ற காரணங்களால் தாக்குதலை தாமதப்படுத்தியதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.