
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 நபர்கள் பிணைக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இது வரையில் 42,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90,ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு அதிகமானவர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளனர். காஸாவில் கொல்லப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 16,456 க்கும் அதிகமானோர் – குழந்தைகள் என்றும் 11ஆயிரத்துக்கும் மேல் பெண்கள் எனவும் 8.6 சதவீதம் பேர் வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேல் காஸா,லெபனான் உள்ளிட்ட இடங்களில் தாக்குல் நடத்தி வருகின்றது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது: ”வடக்கு எல்லையில் இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர்கள் தொலைவில் எல்லைக் கோட்டுக்கு அப்பால், அவர்களின் நண்பர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் எங்களுடைய முகாம்களை தாக்குவதற்காக தயார் செய்த உள்கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள்தான் வெற்றி நாயகர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களான இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களும், காசாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
ஓராண்டுக்கு முன்பு நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானோம். கடந்த 12 மாதங்களில் நாம் எதார்த்தத்தை முழுமையாக மாற்றியிருக்கிறோம். உங்களுக்கு என்னுடைய வீரவணக்கம். வெற்றியின் தலைமுறையினர் நீங்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே” என்று குறிப்பிட்டுள்ளார்.
