முடிவுக்கு வரும் இஸ்ரேல் – காஸா போர்: கொண்டாடும் மக்கள்!

காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன.

காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின.

இந்த நிலையில், “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருக்கின்றன” என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பொருள் அனைத்து பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நிகழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார்.

திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார்.

அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது,

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ்   இஸ்ரேல் பகுதிக்குள் தாக்குதலை நடத்தியது. இதில்சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணையக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல்  இராணுவம் பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து  காஸா பகுதியில் 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். இது ஒரு இனப்படுகொலையென கண்டனங்களும் இஸ்ரேலுக்கு எதிராக எழுந்துள்ளது.

மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.