சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருக்கு -மலையக மக்கள் கருத்து

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில்,  நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதன் திலகேஷ்வரி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த போது,

“பொருளாதார  நெருக்கடியில சாமான் விலையெல்லாம் கூடிப்போச்சு. கோதுமை மாவு ஒரு கிலோ 270 ரூபாய். காலையில் வேலைக்கு போற அவசரத்துல நாங்க ரொட்டி சுட்டு சாப்பிட்டுட்டு பகல் சாப்பாட்டுக்கும் மலைக்கு கட்டிக்கிட்டு போவோம். இந்த நிலையில மாவு வில கூடுனதால எங்கபாடு திண்டாட்டமா இருக்கு.

ஆயிரம் ரூபா சம்பளம்  வாங்கித் தர்ரேன்னு ஜில்லா காரங்க சொன்னாங்க. ஆனா  எல்லா தொழிலாளர்களுக்கும் அந்த சம்பளம் கெடைக்கல. ஒரு சில தோட்டங்கள்ல ஆயிரம் ரூபா கொடுக்குறாங்க. ஆனா வேலை நாள கொறச்சிபுடறாங்க. மாசத்துக்கு பத்து பதினைஞ்சு நாளுதான் வேலை கெடைக்குது. இந்த நிலையில எங்களுக்கு வர்ற வருமானம் பத்தாம இருக்கு.

முந்தியெல்லாம் தோட்டத்தில ஆடு மாடுன்னு பட்டி பெருக வளர்த்தோம்.இப்ப அதுக்கும் எடம் இல்ல .தோட்டத்தை நிர்வகிக்கிற கம்பனி காரங்க கிட்ட ரொம்ப பெரச்சனையா இருக்கு.புள்ளக பசி பசின்னு அழுவுது. என்ன செய்றது. இருக்கிற கஞ்ச அரை வயிறும் கால் வயிறுன்னு குடிச்சு புட்டு ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு இருக்கோம். எங்க வீட்டு கோழி முட்ட போடுது. அதுல அஞ்சு பத்து கெடைக்குது. வருமானம் பத்தாத நாள சில வீட்டு ஆம்புளங்க டவுனுக்கு வேலக்கி போறாங்க. இன்னும் கொஞ்ச பேர் தோட்ட வேலை முடிஞ்சு சிங்களவங்க இருக்க கிராமத்துக்கு வேலக்கி போறாங்க.இப்புடி கெடைக்கிற வருமானத்த வச்சித்தான் வயிற நெறச்சுக்கிட்டு இருக்கோம்.

நாட்டில இப்ப பெரச்சன முத்திப்போச்சு.இனியும் இந்த நாட்ட நம்பி பிரயோசனம் இல்ல.புள்ளங்க படிப்பு எல்லாம் வீணாப்போச்சு.அவங்க ஆசப்பட்டத வாங்கி குடுக்க முடியலைன்னு வயித்தெரிச்சலா இருக்கு.நான்கூட அடுத்த மாசம் சவூதிக்கு தான் வேலைக்கு போக நெனச்சிருக்கேன். சின்ன புள்ளிகள் நெனச்சா மனசு பாரமா இருக்கு.என்ன பண்றது.” என்றார்.

Tamil News