ஈழத்தமிழர் இறைமையை அழிக்க ஒரே நாடு 2 அமைப்புக்கள் என்ற சீனக்கொள்கை வழித் தீர்வினை சிறிலங்கா முயற்சிக்கிறதா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 372

தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்குட்பட்டதாகவே என்றும் கருதும் சீனா, தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடலில் போர்ப்பயிற்சிகளை நவீன போர்க்கப்பல்கள் போர்விமானங்களுடன் நிழல் யுத்தம் போலவே கடந்த வாரத்தில் நடத்தி முடித்த நிலையில் 2026ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அரசத்தலைவர் ஷிஜின்பிங் இந்தப் போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டுச் செய்தியினை வழங்குகையில்  “ நமது அன்னை பூமியை மீள இணைக்கும் இந்தப் பணியை தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெளிவாக உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். மேலும், “ஒரே நாடு 2 அமைப்புக்கள் என்ற கொள்கையை நாம் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகியவற்றை நமது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஒன்றிணைக்க ஆதரவு அளிக்க வேண்டும். அவற்றுடன் நீண்டகால வளம் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றையும் தொடர்ந்து பேண வேண்டும்” என்னும் கருத்துக்களையும் சீன அரசத்தலைவர் வெளிப்படையாக உலகிற்கு அவருடைய செய்தியில் தெளிவாக்கியுள்ளார்.
சீனத்தலைவரின் இந்தச் செய்தியை நுணுக்கமாக எடுத்து நோக்கின் சீனச் சிந்தனை வழி தனது அரசியல் கொள்கைகளை உருவாக்கி வளர்ந்து இன்று சிறிலங்காவின் ஆட்சித் தலைமையாக உள்ள தேசிய மக்கள் சக்தி இலங்கைத் தீவினை ஒரே நாடாக மக்களிடை அழுத்தப்படுத்துவதும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்னும் அமைப்புக்களாக ஈழத்தமிழரிடம் இருந்து பிரித்தானிய காலனித்துவம் கைப்பற்றிய யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் நிலங்களை அவை ஈழத்தமிழரின் இறைமையுள்ள நிலப்பரப்புக்கள் என்ற வரலாற்று உண்மைக்கு மாறாக வடக்கு கிழக்கு மாகாண செயற்திட்ட பகுதியாக பேசி வருவதும் சீனாவின் ஒரே நாடு இரு அமைப்புக்கள் என்ற கோட்பாட்டினை தேசிய மக்கள் சக்தி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்பில் கட்டமைக்க முயல்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
சிறிலங்காவின் முன்னைய சிங்கள அரசாங்கங்கள் எல்லாமே இது எங்கள் நாடு (அபே ரட்ட)  – சிங்களவர்களுக்கே உரிய நாடு ( அபே ஜாதிய) – பௌத்த ஆகம ஆட்சிக்குரிய நாடு (அபே ஆகமய) என்ற சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை வழி 1956 முதல் கடந்த 70 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இன்று வரை வாழ்ந்து வரும் ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகத்தை மறுக்கும் மறைக்கும் அரசியல் கொள்கை கோட்பாடுகளையே முன்னெடுத்து வருவதன் தொடர்ச்சியாகவே தேசிய மக்கள் சக்தியும் தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கி வருகின்றது என்பதை உணர்ந்து ஈழத்தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்கே இன்றைய அதன் ஒரே நாடு ஒரே மக்கள் கோட்பாடு என்பது சீனச்சாயம் பூசிய பழைய கோட்பாடே என்பதை இலக்கு இங்கு கட்டுடைப்புச் செய்ய வேண்டிய தேவை எற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிவாரண இணைப்பாளர் டொம் பிளட்சர் அவர்கள் அமெரிக்கா மனிதாபிமான தேவைகளை இராஜதந்திரத்துடனும் சமாதானத்தை உருவாக்குவதுடனும் இணைக்கும் ஆண்டாக 2026 ஐக் கட்டமைத்துள்ளது என்று கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைத் தீவில் அண்மையில் ஏற்பட்ட இயற்கையின் பேரிடரையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான வகையில் பலாலியில் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களையும் கட்டுமானப் பொருட்களையும் வழங்கியது. இதனால் தமிழர் தாயகப் பகுதிகளிலும் அமெரிக்க வழங்கலால் நன்மைகள் ஏற்பட்டன. இவற்றைக் கவனத்தில் எடுத்த தமிழர் தாயகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்துத் தமிழ்த்தாய்மார் வவுனியாவில் தங்களது 3237வது நாள் அவர்களது சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கு 01.01. 2026 இல் அமைந்த வரலாற்று நிலையில் நடாத்திய போராட்டத்தின் போது விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுக்கு தாங்களே நன்றி தெரிவிப்பதாகவும் எந்தத் தமிழ் அரசியல்  கட்சியோ  அல்லது சிவில் சமுகச் செயற்பாட்டாளரோ அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
அத்துடன் “ இத்தியாகம் மற்றும் மன உறுதி நிறைந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் பிள்ளைகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவுமாறும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவு அளிக்குமாறும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்” எனவும் அந்தத் தமிழ்த்தாய்மார் எவ்வாறு தாயகத்திலும் அனைத்துலக நாடுகளிலும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் அரசியல் செய்ய வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் “நாங்கள் அரசியல்வாதிகளல்ல . மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்தத் தார்மீக அடிப்படையில் பேசுகின்றோம்” என அவர்கள் தங்களுக்கு எங்கிருந்து பேசுவதற்கான ஆணை வருகிறது என்பதையும் தெளிவாக்கியுள்ளனர்.
அத்துடன்  “இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக்கட்டுமானங்களுக்கும் முந்தியது ஆயினும் சமகாலத் தமிழ்த் தலைவர்கள் பலர் இந்த எதார்த்தத்தைப் புறக்கணித்து அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளியழுத்தங்கள், அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர்” எனப் பேசி இலக்கு எதனை மக்கள் முன்வைக்க விரும்புகிறதோ அதனையே மக்கள் செய்கிறார்கள் – செய்வார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். கூடவே ஈழத்தமிழர்கள் உறுதியுடன் உறைவிடம் விழ விழ எழும் மரணமற்ற மனித குலம் என்பதை உறுதிப்படுத்தம் வகையில் அந்தத் தாய்மார் “ ஈழத்திலும் உலகத் தமிழ் புலம்பெயர் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தமது பதாகையின் வழி தெரிவித்துள்ளதைப் பார்க்கையில் “ வீரம் தருவது தாய் முலைப்பாலடா” என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகள் மீள்நினைவாகின.
அதே வேளை மக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் மக்களின் குரல்கள் ஒலிக்கும் ஆண்டாக 2026 அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில் “ தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – வலிந்து காணமால் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தீர்வு – மற்றும் மாகாணசபை தேர்தலை நடாத்தி குறைந்த பட்ச அதிகாரத்தையாவது அரசியலமைப்பு வழி தாருங்கள்” எனக்  கோரியுள்ளமை அமைகிறது. சிவில் சமுக அமைப்புக்களும் விழிப்புணர்வு கொண்டெழுவதற்கு உதாரணமாக மன்னார் கத்தோலிக்க ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியும் “ அமைதி, நீதி, நம்பிக்கை, உண்மை, அன்புநிலை வாழ்வு என்பன புத்தாண்டில் மீள உழைக்க” அழைப்பு விடுத்துள்ளது.
கூடவே கடந்த மாத பேரிடரில் இருந்து மீண்டெழ ஒருவர் ஒருவருக்கு உதவிய அதே உளவியல் நிலை நாளாந்த வாழ்வாக வேண்டும்” எனவும் ஆயர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 61 சிவில் சமுக அமைப்பினர் கத்தோலிக்க மற்றும் திருச்சபைக் கிறிஸ்தவக் குருக்கள் தலைவர்கள் உட்பட “அரசைப் பாதுகாத்தல்” என்ற மையப்பொருளில் புதிய சட்டம் பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பலவழிகளில் மிக மோசமாக உள்ளதை உலகிற்கு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியமையும் சிவில் சமுகங்களின் வலிமை பெருகுவதை உணர்த்துகிறது. அத்துடன்   “ வடபகுதியின் இருபெரும் மூத்த விகாரதிபதிகளும் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள உண்மைகளை அநுரகுமார உட்பட அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என தமிழ்த்தேசியப் பணிச் சபையின் தலைவர் முனைவர் குமாரகுருபரன் விடுத்துள்ள அறிக்கையும் ஈழத்தமிழரின் சிவில் சமூக அமைப்புக்கள் பொதுக்கோரிக்கைகளை முன்வைப்பதில் ஒருமைப்பாட்டுடன் செயற்படத் தொடங்கி விட்டதை வெளிப்படுத்துகின்றன.
இந்நேரத்தில் அனைத்துலக அரசியலிலும் மனிதாய தேவைகள் இராஜதந்திரத்துடனும் சமாதானத்தை உருவாக்கலுடனும் இணைக்கப்பட்ட ஆண்டாக அமெரிக்காவால் 2026ஐ மாற்றியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிவாரண இணைப்பாளர் டொம் பிளட்சர் தெரிவித்துள்ளமை தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் இராஜதந்திரத்துடனும் சமாதான உருவாக்கல் மூலமும் தங்கள் தாயகத்தின் இறைமையையும் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இந்த ஆண்டில் முன்னெடுப்பதற்கான உரையாடல்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை வேகமாக முன்னெடுக்க வேண்டும். இரஸ்யா நிலவில் 2036க்குள் அணுநிலையமைக்கவும் சீனாவுடன் இணைந்து நிலவில் ஆய்வுமையம் அமைக்கவும் திட்டமிடுவது ஈழத்தமிழர்களுக்கு பிரச்சினைகளுக்கு நடுவிலும் எவ்வாறு நீண்டகால திட்டங்களை குறுங்காலத் திட்டங்களை வகுக்க வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாக அமைகிறது என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்

Tamil News