ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் – அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எதிா்ப்பு

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் இராஜதந்திர ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உமா ஓயா திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவிற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டிற்கு வருகை தருவது தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திடம் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, ஈரானிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி வரும் விமானம் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி பலத்த பாதுகாப்புடன் உமாஓயா சென்று திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு அன்றைய தினமே ஈரானுக்கு திரும்பிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவினரும் அமெரிக்க உளவுத் துறையினரும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.