அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை!

அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று   ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் ‘சட்டவிரோதமானவை’ என்றும், இது ஒரு ‘கடற்கொள்ளைச் செயல்’ என்றும்  ஈரான் குறிப்பிட்டுள்ளது. ஈரானின் ஐஆர்ஐபி செய்தி முகமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், போர் முடிவடைந்த பின்னரும் கூட, ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப்போவதாக  ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய கடல் எல்லைகள் வழியாகச் செல்ல, எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை  ஈரான் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகளை எச்சரிக்கும் வகையில்  ஈரானிய இராணுவம், “இப்பிராந்தியத் துறைமுகங்களின் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், இல்லையேல், யாருக்குமே இல்லாத ஒன்றாகவே அது அமையும்,” என்று கூறியுள்ளது.

“ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்க இராணுவம் குறிவைக்குமேயானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அமைந்துள்ள எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது.” என அந்த அறிக்கை கூறுகிறது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இனிமேல் அமெரிக்கா முற்றுகையிடும் என்று கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  ஈரானை மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.