குமாரபுரம் படுகொலையை நினைவு கூர முயன்ற பொது மக்களை கடுமையாக அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்

அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்

மக்களை கடுமையாக அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்: மூதூர் –  குமாரபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தலை அவர்களின் உறவுகள் முன்னெடுக்க முயன்றபோது புலனாய்வாளர்கள் கடும் அச்சுறுத்தலை மேற்கொண்டதனைத் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் இன்று (12)விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கயைில், 11.02.1996 அன்று சுற்றிவளைக்கப்பட்டு குமாரபுரம் மக்கள் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய போது  கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 26 பேர் குறித்த சம்பவத்தில் பலியானதுடன் 25 பேர் காயமடைந்தனர். அப்படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலைச் செய்ய முற்பட்ட கிராமமக்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த அச்சுறுத்தலின் உச்ச நடவடிக்கையாக கடந்த 10 ஆம் திகதி கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களைச் சந்தித்த புலனாய்வாளர்கள், தாம் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றிருப்பதாகவும் நினைவேந்தல் செய்தால் கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை நினைவேந்தலைச் செய்ய செல்ல வேண்டாம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த அச்சுறுத்தலினால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கூட அஞ்சலி செய்ய அஞ்சி சில உறவினர்கள் 11 ஆம் திகதி வழமையாக நடாத்தப்படும் பொங்கல் நிகழ்விலும் மாலை நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள இடத்தில் நிகழும் நினைவேந்தலிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஒருபோதும் தமிழினத்தை நிம்மதியான வாழ்வுக்கு இட்டுச்செல்லப்போவதில்லை என்பதுடன் சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக தமிழருக்கான நீதி கிடைக்கும் மட்டும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டப் போராடவேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த அச்சுறுத்தல் விடயத்தை உரிய சான்றுகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைஆணையாளருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News