ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது.

திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது என்று உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த துண்டிப்பு “ஒரு விரிவான அல்லது முழுமையான முடக்கம்” என்று கூறப்படுகிறது.

பல வாரங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்த துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தலிபான் அதிகாரிகள் பல மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் (fibre-optic) இணைப்புகளை துண்டிக்கத் தொடங்கியதுடன், அதிவேக இணையத்தை கடுமையாக மட்டுப்படுத்தினர்.

செப்டம்பர் 16 அன்று, பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா ஜைட் வடக்கில் ஃபைபர் ஆப்டிக் சேவைகளை முழுமையாகத் தடை செய்வதாக அறிவித்தார்.

AFP செய்தி  நிறுவனம் தனது காபூல் பணியகத்துடனான அனைத்து தொடர்புகளையும் உள்ளூர் நேரப்படி திங்களன்று மாலை 5:45 மணியளவில்  துண்டித்ததாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் 9,350 கிலோ மீட்டர் ஃபைபர் ஆப்டிக் வலையமைப்பு – பெரும்பாலும் முன்னாள் அமெரிக்க ஆதரவு அரசாங்கங்களின் கீழ் கட்டப்பட்டது – நாட்டை பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்க ஒரு உயிர்நாடியாக இருந்தது.

2024 ஆம் ஆண்டில், தாலிபான் ஆட்சியின் கீழ் காபூல் அதிகாரிகள் இந்த வலையமைப்பை ஆப்கானிஸ்தானை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும் பரந்த உலகத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு “முன்னுரிமை” திட்டமாக அழைத்தனர்.

2021 ஆகஸ்ட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தாலிபான்கள் பரந்த சமூகக் கட்டுப்பாடுகளை, குறிப்பாக பெண்கள் மீது அமல்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் மீது கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் நாடு தழுவிய தகவல் தொடர்பு துண்டிப்பை விதிப்பது இதுவே முதல் முறை.