மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும் – பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு

இலங்கையில் பாரிய மனித புதைகுழிகளும் தோல்வியில் முடிவடைந்த அகழ்வுகளும் என்ற அறிக்கையை வரவேற்பதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள் உரிய முறையில் சேகரிக்கப்படுவதையும் பொறுப்புக்கூறல் முன்னேற்றம் ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக உறுதி செய்வதற்காக பிரிட்டன் இலங்கைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் என  தமிழர்களிற்கான அனைத்துநாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள முழுமையான அறிக்கை இலங்கையின் பல பகுதிகளில் காணப்படும் நூற்றுக்கணக்கான மனித புதைகுழிகளை அகழ்வதில் இலங்கை தோல்விகண்டுள்ளதை ஆராய்கின்றது – இந்த மனித புதைகுழிகளில் 1983 முதல் 2009 முதல் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் காணப்படுகின்றன எனவும் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  குடும்பத்தவர்களுடன் இணைந்து பணியாற்றும் அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ளனர்,இந்த ஆவணம் விசாரணைகளில் அரசாங்கம் திட்டமிட்டு தலையிட்டதை  துல்லியமாக வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ள பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்;சி நாடாளுமன்ற குழு இன்னமும் தீர்வு காணாமல் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விபரங்களை கொண்ட நாடுகளில் இலங்கைஇரண்டாவது இடத்தில் உள்ளது என  ஐநா தெரிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் மனித புதைகுழிகளின் வரலாறு என்பது அரசியல் தலையீடுகள்  இடையூறுகள் மற்றும் அரசியல் உறுதிப்பாடு இன்மையின் வரலாறு ஆகும்,அது அரசாங்கத்தின் உயர்மட்டம் வரை நீள்கின்றது எனவும் தெரிவித்துள்ள  பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்துகட்சி  நாடாளுமன்ற குழு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்குஇது தீர்க்கப்படாத துன்பம் – துயரத்திற்குள் சிக்குண்டுள்ளவர்கள் தங்கள் நேசத்திற்குரியவர்களை காணாமலே உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.