காணி, காவல்துறை அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, காவல்துறை அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன. ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.