வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால நிா்வாக சபைகளை அமைப்பது என்பது தொடா்பில் இப்போது அரசியல் அரங்கில் அதிகளவுக்குப் பேசப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த இந்த யோசனையை பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் நிராகரித்துள்ளன.
மாகாண சபைகளுக்கான தோ்தல்களை நடத்தாமல் தவிா்ப்பதற்கான உபாயமாக ரணில் இதனைப் பயன்படுத்துகின்றாா் என்ற கருத்து அவா்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியிலுள்ள ரணிலின் உபாயம் என்ன? இதனை தமிழ் மக்கள் ஏற்கலாமா போன்ற கேள்விகளுக்கு அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய பதில்களில் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்காகத் தருகின்றோம்.
கேள்வி – மாகாண சபைகளுக்கான தோ்தல்கள் இப்போதைக்கு நடைபெறாது என்றும். இடைக்கால நிா்வாக சபையை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அமைக்கலாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றாா். இதில் உண்மையில் ஜனாதிபதியின் நோக்கம் என்னவாக இருக்கின்றது?
பதில் – இலங்கையில் இவ்வாறான இடைக்கால நிா்வாகம் அல்லது கட்டமைப்புக்கள் தொடா்பான பேச்சுக்கள் அவ்வப்போது, அரசியல் நோக்கங்களை நிறைவு செய்வதற்காக கையாளப்படுகின்ற ஒரு செயன்முறையாகத்தான் இருந்து வருகின்றது. அவ்வாறான ஒரு தேவைப்பாடு தற்போது சா்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடா்பான பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சந்தா்ப்பத்தில் அரசாங்கத்துக்குத் தேவையானதாக இருந்திருக்கலாம்.
அதேபோல, தோ்தல்களை ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிா்கொள்வதற்கான ஒரு தந்திரோபாயமாக இதனைப் பயன்படுத்துவதற்கான தேவை தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது, இடைக்கால நிா்வாகம் தொடா்பான உரையாடல்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதித் தோ்தலை நோக்கி செல்வதற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இவ்வாறான ஒரு கட்டமைப்பு அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கலாம். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் இவ்வாறான ஒரு நகா்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்திருக்கின்றாா் என்று கருதுகிறேன்.
கேள்வி – இவ்வாறான சபை ஒன்று அமைக்கப்பட்டால், அதன் உறுப்பினா்களை நியமிப்பதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கும்? ஜனாதிபதியிடம்தான் இருக்குமா?
பதில் – இலங்கையின் வரலாற்றில் இதுவரை காலமும் இடைக்கால நிா்வாகம் தொடா்பான உரையாடல்களில் உள்ள அனுபவம், அல்லது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உரையாடல்களிலும், அல்லது அதற்கு முற்பட்ட கால அனுபவங்களிலும் இவை ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது.
கேள்வி – இடைக்கால நிா்வாகம் என அமைக்கப்படும் இந்தக் கட்டமைப்பு நிரந்தரமானதாகிவிடக்கூடிய ஆபத்து உள்ளதா?
பதில் – வடக்கு கிழக்குக்கு என இடைக்கா நிா்வாகம் ஒன்று அமைக்கப்படும் போது அது நிரந்தரமானதாகவிடுவதைத்தான் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் விரும்பியிருக்கின்றன. மாகாண சபைத் தோ்தலைக்கூட அவா்கள் கைவிடுகின்ற அல்லது ஒத்திவைக்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. அல்லது மாகாண சபையை இல்லாமல் செய்தல் என்பதும் அவா்களுடைய நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றது. இதனால், வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களையும் கையாள்வதற்கான செயல்முறை ஒன்றை அவா்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கின்றாா்கள் என்று நான் கருதுகின்றேன்.
இதனால், இதனை நிரந்தரமானதாகக் கொண்டு செல்வதற்கான சூழலை அவா்கள் ஏற்படுத்துவாா்கள். அதற்கான வாய்ப்பு அதீதமாக இருக்கின்றது. ஆனால், இலங்கை அரசியல் நியமத்துக்கு உட்பட்ட வகையில் தமிழா்கள் ஒரு உரையாடலை இக்காலப் பகுதியில் முன்வைக்கின்ற போது, வடக்கை தனியான ஒரு அலகாக அடையாளப்படுத்தாமல் கிழக்கையும் உள்ளடக்கிய வகையில் இதற்கான இடைக்கால வரைபு ஒன்றுக்கான உரையாடலை முதன்மைப்படுத்துவது, அல்லது இவா்களால் அது தொடா்பான ஒரு முன்மொழிவை வைப்பது அடிப்படையில் ஆரோக்கியமானதாக இருக்கும்.
மாகாண சபைக் கட்டமைப்பு அல்லது அதற்கான தோ்தல் சாத்தியமற்றதாக இருக்கும் சூழலில் வடக்கு – கிழக்கை ஒரு தனித்துவமான அலகாக முன்மொழிவதற்கான வாய்ப்பு சாத்தியமானதாக இருந்தால், அதன் அதிகாரங்கள், அதன் உறுப்பினா்களின் நியமனம், தலையீடற்ற வகையில் அது செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் என பல விடயங்கள் இதில் விவாதிக்கப்படவும் முடிவுறுத்தப்படவும் வேண்டிய விடயங்களாக இருக்கும். ஆனால், தோ்தலை ஒத்திவைப்பதற்காக உருவாக்கப்படும் ஒன்றாக இது அமையும் என்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் இது ஒரு பலமானதாக – பொருளாதார ரீதியாக வலுவைக் கொடுக்கக்கூடிய, சமூக ரீதியாக பலத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் அதனைக் கையாளக்கூடிய தேவைப்பாடு தமிழ் அரசியல் சக்திகளுக்கு இருக்கின்றது. அந்த வகையில் இந்த விடயத்தை அணுகுதல் அவசியமானதென்றே நான் கருதுகின்றேன். இது ஒரு நீடித்ததாக இருக்கும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பிலும் உள்ளது. ஆனால், இது நீடித்து நிலைத்ததாக இருந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கான வாய்ப்புக்களை இழத்தல் என்பது – அது ஆளுநருடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம். அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நான் கருதுகின்றேன்.
கேள்வி – இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால நிா்வாகத்துக்கு இருக்கக்கூடிய அல்லது இருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை?
பதில் – பொருளாதார ரீதியான தீா்மானங்களை எடுக்கின்ற தன்மை போன்றன அந்த சபைக்கு உரித்தானதாக இருக்க வேண்டும். அது அரசியல் கட்சிப் பிரமுகா்களை மட்டும் உள்ளடக்காது, அது பெருமளவுக்கு தகைமையுடைய விற்பன்னா்களைக் கொண்ட – அதற்கே உரித்துடைய திறமையுடைய அந்தத் திறனைப் பிரயோகிக்கக்கூடிய வல்லமையுடைய சபையாக அது கட்டமைக்கப்படுகின்ற போது, அது ஒரு சமூக பொருளாதார வலிமை படைத்த கட்டமைப்பாக அது உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கும்.
இது புலம்பெயா்ந்த சமூகத்தில் இருக்கக்கூடியவா்களை உள்ளடக்கக்கூடிய அவா்களுடைய முதலீடுகளை பெறக்கூடிய எண்ணப்பாடுகளையும் முதன்மைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
இது முழுமையான ஒரு அரசியல் – பொருளாதார கட்டமைப்பையும் சமூகங்களின் தேவைகளைப் பரதிபலிக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த இடைக்கால வரைபு என்பது கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது.
மிக ஆழமாக உரையாடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வடக்கு கிழக்கு மக்களுடைய பொருளாதாரத் தேவைகளையும் உட்கட்டமைப்பு மாற்றங்களையும் செய்யக்கூடிய வகையில் அதன் அதிகாரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அதனுாடாகத்தான் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி சாா்ந்த விடயங்கள் எல்லாவற்றையும் நிா்வகிக்கக்கூடிய அதிகார எல்லைகளை உள்ளடக்கியதாக இது இருக்க வேண்டும். அதற்கான செய்முறை ஒன்று வரைபாக உள்ளடக்கப்பட வேண்டும். முழுமையாக தென்னிலங்கை அரசியலுக்குள் இதனுடைய செயற்பாட்டை ஒப்படைக்காமல் – அவற்றின் செல்நெறி ஒவ்வொன்றையும் வகுக்கும் போது வடக்கு கிழக்கு சாா்ந்த விதத்தில் அதற்குரிய பெறுமானங்களைக் கொடுக்க வேண்டிய தேவைப்பாடும் அவசியம். அவ்வாறான நிலையிலேயே ஆரோக்கியமான ஒரு இடைக்கால கட்டமைப்ப உருவாக்க முடியும்.