பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் – பகுதி – 2
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், G7 மாநாட்டில் இது தொடர்பாக ஆராயப்பட்டது தொடர்பாகவும் ‘இலக்கு’ இணையத்திற்கு அளித்த நேர்காணலின் 2ஆவது பகுதி 

கேள்வி – மிகப்பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடுகளே காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், அவர்களின் நடிவடிக்கைகள் போதுமானதா?

பதில் – உலகத்தில் இருக்கக் கூடிய பொருளாதாரப் பலம் பெற்ற நாடுகள் தான் இன்று பூமி வெப்பமடைவதில் மிகக் கூடிய பங்களிப்பை நல்கிக் கொண்டிருக்கின்றன. அதில் பிரதானமானது அமெரிக்கா.  இது மிக்கக் குறைவான சனத் தொகை உள்ள நாடாக இருந்த  பொழுதிலும்,  உலகை சூடுபடுத்துகின்ற காபனீரொட்சைட்டை  வெளியிடுவதில் மிகக் கூடுதலான அளவிற்குப் பங்கேற்கின்ற நாடாக இருக்கின்றது. தலைக்கு 17.5 தொன் காபனை அமெரிக்கா வெளியிடுகின்றது. இந்தியா தலைக்கு 1.6தொன் காபனை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தக் காலநிலை மாற்றம் தொடர்பாக, காலநிலை மாற்றத்திற்குக் காரணமான காபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியினால் கொண்டு வரப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் எல்லாவற்றிற்கும், ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கிறது. அத்துடன் அந்த ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறி இருக்கின்றது. காபனீரொட்சைட் வாயுவின் பாவனையை தான் குறைத்தால், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்க நேரிடும். இந்த வல்லரசுப் போட்டியில் தன்னால் முன்னேற முடியாது  என்ற ஒரு காரணத்தைக் கொண்டும், அதேநேரம் வளர்முக நாடுகள், ஏழை நாடுகளைக் கட்டுப்படுத்தாமல் தனியே  வளர்ந்த நாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற திட்டங்களைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியும், அமெரிக்கா வெளியேறி இருக்கின்றது.

கடைசியாக ஓரளவிற்கேனும் நம்பிக்கை தரக் கூடிய ஒப்பந்தமாக இருந்தது பாரிஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் கூட  வெளிப்புறப் பார்வைக்கு சுற்றுச் சூழலுக்கு நன்மை தரக்கூடிய  அல்லது பூமி வெப்பமடைதலுக்கான விரைவான தீர்வைத் தரக் கூடிய ஒப்பந்தமாகத் தோற்றினாலும் கூட, அதுவும் ஒருவகையில் ஏமாற்றம் தான். அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், ஒவ்வொரு நாடுகளும் தாங்கள் என்ன செய்யப் போகின்றோம். அதாவது இந்த காபனீரொட்சைட் வாயுவின் வெளியேற்றத்தை எவ்வாறு குறைக்கப் போகின்றோம். எவ்வாறு நடைமுறைப் படுத்தப் போகின்றோம் என்று சொல்ல வேண்டிய ஒரு ஒப்பந்தமாக இருந்ததே தவிர, கட்டுப்படுத்துகின்ற ஒப்பந்தமாக இருக்கவில்லை.

வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படையில் துவாரம் தோன்றிய பொழுது, கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையானது, நாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்படுத்தல் என்ற ஒன்று அங்கு இருக்கின்ற காரணத்தினால், ஓசோன் துவாரங்கள் நிரவி, பழைய நிலைக்குச் செல்வதிலும் அந்தப் பாதிப்பைக் குறைக்கக் கூடியதாகவும் இருந்தது.

தங்களுடைய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற காரணத்தினால், அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இருந்த பொழுது, அவர் தன்னிச்சையாகத் தானாகவே அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். ஆனால் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனேயே மீளவும் இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளுவதாக அறிவித்ததோடு, அதற்கான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்.

தற்போது நடந்த இந்த G7 மாநாட்டில்  அமெரிக்க ஜனாதிபதி, பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைந்த பின்னர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தங்களுடைய பொருளாதார நிலைமையைப் பாதிக்கும் என்கின்ற வகையில் அவர்கள் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இப்பொழுது ஒரு வறிய நாடாக இருக்கக் கூடிய ஏதாவது ஒரு நாட்டிலிருந்து, அது இந்தோனேசியாவாக இருக்கலாம், மலேசியாவாக இருக்கலாம். அவர்களது நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்ற ஒரு தொன் காபனீரொட்சைட், நூறு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் உள்ள பருத்தி ஆலையிலிருந்தோ, அல்லது வேறு ஏதோ ஒரு ஆலையிலிருந்தோ வெளியேற்றப்பட்ட ஒரு தொன் காபனீரொட்சைட்டின் விளைவைத் தான் நிச்சயமாக ஏற்படுத்தும்.

ஆகவே இதுகால வரைக்கும் வளிமண்டலத்திற்குள் காபனீரொட்சைட்டை குவித்துக் கொண்டிருந்த இந்த தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள், அது தொடர்பாக எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல், அதற்கு எந்தவிதமான பிராயச்சித்தமும் சொல்லாமல், இப்பொழுது வளர்முக நாடுகளையும், தொழில் வளர்ச்சியடையாத நாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் வைத்து சமப்படுத்த முயல்கின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், நூறு வருடங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட காபனீரொட்சைட்டின் தாக்கம் தான் இப்போது பூமியினுடைய வெப்ப அதிகரிப்பிற்குக் காரணமாகவும், பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்படுத்தப் படுகின்ற பல்வேறு விதமான பாதகமான காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஆகவே அவர்கள் அந்த நூறு வருடங்களிலோ அல்லது கடந்த காலங்களில் வெளியேற்றிய காபனீரொட்சைட்டின் தாக்கத்தினால் தான் ஒட்டுமொத்த பூமியும் இப்போது கொதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறைத்து அல்லது மறந்து, வளர்ந்த நாடுகள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக அதாவது அபிவிருத்தி அடையாத நாடுகள் அல்லது ஏழை நாடுகள், வளர்முக நாடுகளையும் கட்டுப்படுத்த முயல்வது அறிவியல் ரீதியான அறத்திற்கு ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய கருத்தாகும். ஒட்டுமொத்தப் பொறுப்பிற்கும் காரணமானவர்கள் கடந்த காலங்களில் காபனீரொட்சைட்டை குவித்துக் கொண்டிருந்த தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளைத்தான் சாரும்.

ஆகவே அவர்கள் பிராயச்சித்தம் தேட வேண்டும். வளர்முக நாடுகள் வந்து இதை கட்டுப்படுத்துகின்ற பொழுது, காபன் வெளியேற்றத்தைக் குறைக்குமாறு கூறும் பொழுது அவர்களுடைய அபிவிருத்தி பாதிக்காத வகையில், அவர்களுக்கான நிதியூட்டத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் பசுமை சக்திக்குத் திரும்பக்கூடிய அளவு அவர்களுக்கான நிதியையும், தொழில்நுட்ப வசதியையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு இருக்கின்றன. ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி இருக்கின்றார்களே தவிர இந்தத் திட்டம் இதுவரைக்கும் வெற்றி பெறவில்லை.

கேள்வி – இது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு உண்டா?

பதில் – உலகளாவிய ரீதியில் பொதுவாக சூழல் சார்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. ஆனால் காலநிலை மாற்றம் தொடர்பாக சூழல் சார்ந்த குழுக்கள் பேசி வருகின்றனவே தவிர, வெகுஜன மக்கள் இயக்கங்கள் இந்தக் காலநிலை மாற்றம் தொடர்பாக இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்று தான் நினைக்கின்றேன். ஏனென்று சொன்னால் வெவ்வேறு விடயங்களுக்கு எதிராகப் போராடக் கூடிய மக்கள் இயக்கங்கள் இந்தக் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, காபன் வெளியேற்றத்தைக் குறைக்காமல், அல்லது காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அல்லது  மீறுகின்ற தங்களது அரசாங்கங்களுக்கு எதிராக இந்த மக்கள் திரள் திரளாக உரிய முறையில் போராடவில்லை. ஆகவே மக்களிடம் இது போதியளவு விழிப்புணர்வு பெறவில்லை என்று தான் நினைக்கின்றேன். மக்களைச் சார்ந்த பல்வேறு விடயங்களில் அரசாங்கம் உதாசீனம் செய்கின்ற பொழுது அல்லது பாராமுகமாக இருக்கின்ற போது, அல்லது மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது அந்த அரசாங்கத்திற்கு எதிராக எல்லா நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. வெடிக்கின்றன. ஆனால் இந்த காபனீரொட்சைட்டை கட்டுப்படுத்த தவறுகின்றதில் ஒரு மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு அல்லது தேசத்தின் பேரழிவிற்குக் காரணமாக இருக்கக் கூடிய இந்த விடயத்திற்கு எதிராக மக்கள் இயக்கங்கள் இன்னும் அந்த அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி பெறாத நிலையே இன்னும் அவர்கள் போதியளவு விழிப்புணர்வைப் பெறவில்லை என்று தான் நான் நினைக்கின்றேன்.

முற்றும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்