பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் – பொ. ஐங்கரநேசன்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், G7 மாநாட்டில் இது தொடர்பாக ஆராயப்பட்டது தொடர்பாகவும் ‘இலக்கு’ இணையத்திற்கு அளித்த நேர்காணல் வடிவம்.

கேள்வி –  அண்மையில் நடைபெற்ற G7 மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த உங்கள் கருத்து என்ன?

G 7 பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பதில்: பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சொல்லப்போனால் அதிகார ரீதியாகவும் பலம் பெற்ற ஏழு நாடுகளின் அரசியல் செயற்பாட்டிற்கான கூட்டமைப்புத் தான் G – 7 ஆகும். இதில் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  ஆகவே இந்த G – 7 எனப்படுகின்ற அரசியல் பொதுமன்றம்  எடுக்கின்ற முடிவுகள்  எப்பொழுதுமே தீர்மானகரமான, ஆணித்தரமான,  செயற்படுத்தக் கூடிய ஒரு முடிவாகத் தான் இருக்க முடியும். காரணம் இந்த 7 நாடுகளும் பொருளாதார ரீதியாக, அதிகார ரீதியாகப் பலம்பெற்ற நாடுகள்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற இந்த G – 7  மாநாட்டில் 2 பிரதான விடயங்கள் தொடர்பாக உரையாடியிருக்கின்றார்கள்.

  1. இன்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா தொடர்பான விடயங்கள்.
  2. கொரோனாவை விட உலகம் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய சவாலான காலநிலை மாற்றம்.

இவை இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன. ஆனால் புதிதாக, ஆக்க பூர்வமான  செயற்பாடுகளில் தாங்கள் ஈடுபடுவோம் என்பது தொடர்பாக இந்தத் தலைவர்கள் முடிவு எடுத்திருக்கிறார்களா என்று கேட்டால், ஏமாற்றம் தான் உள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற சூழல் பாதுகாப்புத் தொடர்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக பல மாநாடுகளும், உச்சி மாநாடுகளும் நடந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இதுவும் பத்தோடு பதினொன்றாக இருக்கின்றதே தவிர, வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள ஒரு மாநாடாக முடிந்திருக்கின்றதே தவிர, ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தான் நான் சொல்வேன். காலநிலை மாற்றம் தொடர் பாக அவர்கள்  நிலக்கரியைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிப்பதை நிறுத்துவது என்று சொல்லியும், இது தொடர்பான திட்டங்களுக்கு வெளிநாடுகளுக்கு நிதி வழங்குவதை குறைப்பதுஎன்று சொல்லியும் ஒரு முடிவை எடுத்திருக்கின்றார்கள்.

அதேநேரம்  வளர்முக நாடுகளுக்கு, தூய எரிசக்தியைப் பெறுவதற்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்  செலவழிப்பதாகவும் முடிவு  எடுத்திருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இற்றை வரைக்கும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. ஆனால் ஒரேயொரு விடயத்தில் மாத்திரம் இது கவனத்தைப் பெற்றிருக்கிறது என்று தான் நான் சொல்லுவேன். இந்த கொரோனா பேரிடருக்குப் பிறகு எந்தவொரு தலைவரும்  கூடினது கிடையாது. இப்போது முதற் தடவையாக கொரோனா பேரிடர் காலத்தில் உலகத் தலைவர்கள் நேரடியாகவே பங்களித்த ஒரு மாநாடாக இது கவனம் பெற்றிருக்கின்றதே தவிர, அங்கு எடுக்கப்பட்ட, இந்தக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்த ஒரு மாநாடாக இது கவனயீர்ப்பைப் பெறவில்லை.

கேள்வி: G7 நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் அதிகம் மாசுபடுத்தலை ஏற்படுத்தும் நாடுகளும் உள்ளன இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: இதில் முக்கியமாக சீனா, இந்தியா இருக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளுடன் சமப்படுத்த முடியாது போனாலும், அதிகளவு காபனீரொட்சைட்டை வெளியேற்றுகின்ற நாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடலாம். ஒரு படகில் பயணம் செய்யும் போது யாருடைய தவறினாலோ படகு கவிழ்ந்து போனால் எல்லோரும் மூழ்குவது போலத்தான்  யாருடைய தவறினால் வெளியேறுகின்ற காபனீரொட்சைட்டினால் பூமிக்கு அழிவு ஏற்படுத்தப் போகின்றது என்பது பிரச்சினையல்ல. இந்த G7 நாடுகளுக்கு வெளியே இருக்கக்கூடிய மற்றைய நாடுகளும்கூட காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தை அல்லது பூமியை சூடுபடுத்தக் கூடிய வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு மாற்று  எரிசக்திக்கு அவர்கள் திரும்பவும் வேண்டும். தனியே பணக்கார நாடுகள், அதிகாரம் மிக்க நாடுகள் வெளியேற்றும் வாயுக்களால் தான் பூமி வெப்பமடைகின்றது என்று சொல்லி விட்டு ஒதுங்கியிருக்க முடியாது. ஒட்டு மொத்த பூமியின் இருப்பிற்கும், நாடு வேறுபாடுகள் இல்லாது, ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி, தனியே காபனீரொட்டை மட்டுமல்லாது மீதேன், நைத்திரைட் ஒக்ஸைட், போன்றவற்றுடன் பூமியை வெப்பப்படுத்தக்கூடிய வேறு வாயுக்களும் இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் எல்லா நாடுகளும் பங்கேற்க வேண்டும்.

1320 effects image பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

அண்ணாசாலையில் இருந்தோ, கண்டி வீதியிலிருந்தோ வாகனங்களினால் வெளியேற்றப் படுகின்ற வாயுக்கள் கூட அந்தாட்டிக்காவில் இருக்கக் கூடிய பனி மலை உருகுவதில் பங்கேற்கும். பூமி வெப்பநிலை என்பதும், காலநிலை மாற்றம் என்பதும் ஒரு நாட்டிற்குரியது அல்ல. ஒட்டு மொத்த புவிக் கோளத்திற்குரியது. இந்த இடத்தில் அடித்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த G7 நாடுகள், அல்லது அதற்கு வெளியே உள்ள ஏழை நாடுகள் பசுமை சக்திக்கு அதாவது காபனீரொட்சைட் வெளியேற்றத்தைக்  கொடுக்கக் கூடிய நிலக்கரி சார்ந்த நிலத்தடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, அவர்கள் பசுமை சக்திக்குத் திரும்புவதில் இருக்கக் கூடிய இடறுபாடுகளை பொருளாதார ரீதியாகக் களைவதற்கும், அவர்களுக்கான மாற்று எரிசக்தித் தொழில் நுட்பத்தைக் கொடுப்பதற்கும் தாங்கள் இது வரைக்கும் இந்த பூமியில் காபனீரொட்சைட்டை மலையாக ஏற்றிக் குவித்ததால் தான் இன்று இந்தப் பூமி கொதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு, இந்த வளர்ந்த நாடுகள் இதற்கான பங்களிப்பைத் தாமதமின்றிச்  செய்ய வேண்டும்.

கேள்வி: காலநிலை மாற்றம் தொடர்பில் நாடுகள் வழங்கும் வாக்குறுதிகளை பெரும்பாலான நாடுகள் பின்பற்றுகின்றனவா?

பதில்: இதுவரைக்கும் பின்பற்றப்படவில்லை என்று தான் நான் சொல்லுவேன். G7 என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே இருக்கக் கூடிய நாடுகளின் கூட்டு. ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள் கூட கடைசியில் தூக்கி வீசப்பட்டது தான் உண்மை. யேர்மன் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டை கணிசமான அளவு குவித்துக் கொண்டு இருந்த நாடாக இருந்த போதிலும், காலப் போக்கில் அதனைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இன்னும் பல நாடுகள் ஏட்டளவில், வாக்குறுதியளவில் தான் இருக்கின்றனவே தவிர, செயற்பாட்டளவில் இதயசுத்தி யாக இன்னும் இறங்கவில்லை என்பது தான் எனது கருத்து.

தொடரும்….

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் – பகுதி – 2