இந்தோனேசியா: பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் ‘அல் கோஜினி’ (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மசூதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 99 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

விபத்தில் சிக்கியவர்களில் சுமார் 91 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் கட்டடத்திற்கு அனுமதியின்றி கூடுதலாக தளங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததால், கீழ் தளத்தின் அத்திபாரம் அதிக பாரத்தைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

91 பேரைத் தேடும் பணியில் அந்நாட்டுப் பொலிஸார், மீட்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என பலர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அவர்களுக்குக் குழாய்கள் மூலம் ஒட்சிசன் மற்றும் குடிநீர் செலுத்தப்பட்டு வருகிறது.

குறித்த கட்டிடம் பலவீனமடைந்து காணப்படுவதால், மேலும் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாரிய உபகரணங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மாணவர்களின் கதி என்ன என்று அறிய முடியாமல் அவர்களது குடும்பத்தினர் பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.