யாழ்ப்பாணத்தின் அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
நிலையானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில், யாழ்ப்பாணத்துக்கு அப்பாலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இத்திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கலச் சேமிப்பு ஆகியவற்றுடன், அவசரத் தேவைக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகளையும் உள்ளடக்கியதாக, 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுமையான செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பங்களிப்பானது, பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணையாத இத்தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை உறுதி செய்யும்.



