டில்வியில் வைத்து மறைமுகமாகத் தெரிவித்த செய்தியை கொழும்பில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து நாடு திரும்பிய ரணில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினாா்.
“கட்சிகளுக்குள் இணக்கப்பாடு இல்லை. 13 க்கு எதிா்ப்புதான் அதிகமாகவுள்ளது” என்பதை டில்லிக்கு காட்டி பேச்சுவாா்த்தைகளை காவரையறையின்றி ஒத்திவைப்பதுதான் அவரது உபாயம். அதேவேளையில், டில்லியால் எதிா்காலத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்க முடியாது என்பதும் இதன்மூலமாக உணா்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்க் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன?
ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் பேச்சுக்களை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய மறுதினம் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பத்திரிகையான “த இந்து” ஆசிரியா் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இராஜதந்திர மட்டத்தில் அதிகளவுக்குக் கவனத்தைப் பெற்ற ஒன்றாகவும், திரைமறைவில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்துவதாகவும் அது இருந்தது.
“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளுக்குள்
தமிழர் பிரச்னை தொடர்பிலான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி” என்பதுதான் இந்து பத்திரிகையின் ஆசிரியா் தலையங்கம் வெளிப்படுத்தியிருக்கும் முக்கியமான தகவல்!
“இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில்
கூட்டாக வெளியிடப்பட்ட ‘தொலை நோக்கு‘ அறிக்கையில் எதிர்காலத்துக்கான விரிவான திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டிருக்கின்ற போதிலும், விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட எந்தவோர் எழுத்துமூல ஆவணத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை மதிப்பதாக இலங்கையால் முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றியோ அல்லது இந்திய மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்பிலான பிரச்னை குறித்தோ எதுவும் கூறப்படவில்லை” என்றும் தி இந்து சுட்டிக்காட்டியிருந்தது.
பிரதமர் மோடி மாத்திரமே தனது உரையில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் அவசியம் குறித்தும் இலங்கையின் தமிழ் சமூகத்தின் கௌரவமும் கண்ணியமும் கொண்ட வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் அழுத்தமான வேண்டுகேளை விடுக்க வேண்டியிருந்தது. தாங்கள் கொடுத்த கடிதத்தை பிரதமா் மோடி அவதானமாகப் படித்துள்ளாா் என தமிழ்க் கட்சிகள் சில தமக்குத்தாமே பெருமைப்பட்டுக்கொண்டதையும் பத்திரிகை அறிக்கைகள் மூலமாக அறிய முடிந்தது.
விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துகளிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான மிகப்பெரிய செய்தியாக இருக்கக்கூடும். இதன்மூலம் தன்னுடைய நிலைப்பாடு இதுதான் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா்.
புதுடில்லி மீது வேறு விவகாரங்களுக்காக இலங்கை தங்கியிருந்தாலும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்னை தொடர்பான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை கொண்டு வருவதை இனி மேலும் இலங்கை விரும்பப்போவதில்லை
என்பதுதான் இதன் மூலமாக உணர்த்தப்பட்டிருக்கிறது என்ற கருத்தை இந்து பத்திரிகை வெளியிடுவதற்கு இதுதான் காரணம்.
கொழும்பு திரும்பிய உடனடியாகவே அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டிமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது, இந்தியாவைப் பகைத்துக்கொள்வதற்கு ரணில் விரும்பவில்லை. அதனால்தான், நாடு திரும்பியவுடன் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை நடத்துவதாக ஒரு நாடகத்தை அவா் நடத்தினாா். அதாவது இந்தியப் பிரதமா் குறிப்பிட்டதைப் போல 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தான் முயற்சிப்பாதாக அவா் காட்டிக்கொண்டாா். இரண்டாவதாக, நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவில்லை, தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த கருத்தில் இல்லை என்ற கருத்தை ஏற்படுத்துவது அவரது நோக்கமாக இருந்துள்ளது. அதாவது, ரணில் தன்னை நியாயப்படுத்துவதற்கு வேண்டிய ஒரு கள நிலையை உருவாக்கியிருக்கின்றாா்.
அதேவேயைளில், ரணிலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலை முதலில் நடத்தி மீண்டும் ஒரு முறை நிறைவேற்றதிகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் அவரது முதலாவது இலக்கு. தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு அவசியம் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் 13 ஐ நடைமுறைப்படுத்த தான் தயாா் என அவா் சொல்லிக்கொள்கின்றாா். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லாதததுதான் தனக்குள்ள ஒரே பிரச்சினை எனக் காட்டிக்கொள்ள அவா் முற்படுகின்றாா்.
மறுபுறத்தில் சிங்கள மக்களின் ஆதரவும் ரணிலுக்கு மிக முக்கியம். 13 ஐ நடைமுறைப்படுத்த முற்பட்டால், அதனை அவரால் பெறமுடியாமல் போகலாம். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவா்கள் மட்டுமன்றி பொதுஜன பெரமுன கூட அதற்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கலாம். பேரினவாத கட்சிகளின் அண்மைய எழுச்சிக்குப் பின்பாக ராஜபக்ஷக்களே இருக்கின்றாா்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆக, 13 ஐ நடைமுறைப்படுத்த முற்படுவது தனக்கு ஆபத்தானதாக முடியலாம் என்ற கருத்து ரணிலுக்குள்ளது.
இதனால், இந்தியாவையும் தஜா பண்ணிக்கொண்டு, தமிழா்களையும் பகைக்காமல், சிங்கள மக்களின் ஆதரவையும் தக்கவைத்துக்கொண்டு செல்வதுதான் அவரது தற்போதைய உபாயம். அதனைத்தான் அவரது அண்மைக்கால நகா்வுகளில் காணமுடிகின்றது.
மாகாண சபைகள் எதுவும் இயங்காதுள்ள நிலையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதோ அதிகாரங்களை வழங்குவதோ அா்த்தமுள்ளதாக இருக்காது. அதனால்தான் மாகாண சபைத் தோ்தல்களை நடத்தும் அதேவேளையில், அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. இந்தியப் பிரதமா் மோடியும் அதனைத்தான் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்களின் போது வலியுறுத்தியிருந்தாா். ஆனால், ரணிலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தல்தான் அவரது முன்னுரிமைக்குரிய விடயம். அதற்கு முன்னா் எந்தத் தோ்தலை நடத்தவும் அவா் தயாராகவில்லை.
இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய முடியும்? என்று ஈ.பி.ஆா்.எல்.எப். தலைவா் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, “இந்திய கொள்கை வகுப்பாளா்களைப் பொறுத்தவரையில் இது அவா்களுக்குத் தெரியாத ஒரு விடயமாக இருக்காது. ஆனால், இந்தியாவின் கடனுதவிகள் இலங்கைக்குத் தேவையானதாக இருப்பதால், அதனை வழங்கும் போது 13 ஐ ஒரு நிபந்தனையாக புதுடில்லி முன்வைக்கலாம்” எனச் சுட்டிக்காட்டினாா். “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிளால்தான் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தர முடியும் என்று ஐரோப்பிய யுனியானால் நிபந்தனை விதிக்க முடியுமாக இருந்தால், இந்தியாவினால் அவ்வாறான ஒரு நிபந்தனையை ஏன் முன்வைக்க முடியாது?” என்ற கேள்வியையும் அவா் எழுப்புகின்றாா்.
ஆனால், இவ்வாறு நிபந்தனைகளை முன்வைப்பது சிங்கள மக்கள் மத்தியில் தமக்கு எதிா்ப்புக்கள் அதிகரிக்கும் எனவும், இலங்கை அரசாங்கம் மேலும் சீனாவின் பக்கம் சாய்வதற்கு அது வழிவகுத்துவிடலாம் என்றும் இந்தியா அஞ்சுகின்றது. ஏற்கனவே இலங்கை பெருமளவுக்கு சீனாவைச் சாா்ந்தே இருக்கின்றது. இந்தியா எடுக்கக்கூடிய கடும் போக்கு இந்த நிலைமையை மோசமாக்கிவிடுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இந்தியாவுக்குள்ள இந்த தா்மசங்கடமான நிலையை ரணில் விக்கிரமசிங்க துல்லியமாக மதிப்பிட்டவராகவே காய்நகா்த்துகின்றாா்.
இந்திரா காந்தி காலத்திலோ அல்லது ராஜீவ் காந்தி காலத்திலோ இருந்த நிலை இப்போது இல்லை. இந்த நிலையை புரிந்துகொள்ளாமல், மோடி சொன்னால் ரணில் செய்யத்தான் வேண்டும் என நம்பிக்கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் நிலைதான் பரிதாபகரமானது. இலங்கை அரசாங்கத்தை பகைத்துக்கொண்டு எந்த ஒரு தீா்வையும் தமிழா்களுக்குத் தருவதற்கு இந்தியாவினால் முடியாது. அதேவேளையில், தமிழ் மக்களுடைய கட்டுப்பாட்டில் மாகாண சபை ஒன்றிருக்குமானால், அதன்மூலமாக சிலவற்றை சாதிக்கலாம் என புதுடில்லி எதிா்பாா்க்கும். ஆனால், மாகாண சபைகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு ரணில் அரசாங்கம் இப்போதைக்குத் தயாராக இல்லை.
ஆக, தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் இப்போதைய நிலையில் உள்நாட்டுக்குள் இருந்துகொண்டு அவா்களால் எதனையும் சாதித்துவிட முடியாது. பாரிய போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய நிலையில் எந்தவொரு தமிழ்க் கட்சியும் இல்லை என்பதும் உண்மை. வெறுமனே இந்தியாவையும், சா்வதேசத்தையும் எதிா்பாா்த்து அரசியல் செய்ததன் பலன்தான் இது என்பதை இப்போதாவது, தமிழ்க் கட்சிகள் புரிந்துகொண்டு மாற்றுப் பாதை ஒன்றையிட்டு சிந்திப்பது அவசியம்!