கச்சத்தீவு அந்தோனியார் ஆலய விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மொத்தமாக 100 பேர் மட்டும் பங்கேற்க முடியும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு தேவாலய விழா ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். பாரம்பரியமாக இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வர்.
கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பதால், அங்கு சென்று வர அந்நாட்டின் அனுமதியை இந்திய மீனவர்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்று முதலில் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை கச்சத்தீவுக்குள்அனுமதிக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கச்சத்தீவு புனித அந்தோனி தேவாலய திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 50 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 50 பேரும் பங்கேற்க அனுமதிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.