கத்தார் அமீருடன் இந்திய பிரதமர் ஆலோசனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியும் வியாழக்கிழமை (மார்ச் 19) தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இரு தலைவர்களும் மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

பிரதமர் மோடி, கத்தார் அமீருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தத் தகவலை பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, “எனது சகோதரர், கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பேசினேன், அவருக்கும் கத்தார் மக்களுக்கும் எனது அன்பான ஈத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். கத்தாருடனான எங்களது ஒற்றுமையை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம், மேலும் இப்பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

இது தவிர, கத்தாரில் உள்ள இந்தியச் சமூகத்தினருக்கு அளித்து வரும் அக்கறை மற்றும் ஆதரவிற்காக ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகப் பிரதமர் மோடி கூறினார்.

“ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.